சவார், அஷூலியா மற்றும் காசிப்பூர் உள்ளிட்ட பங்களாதேஷின் பிரதான ஆடை உற்பத்தி மையங்கள், தீவிரமடைந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் சம்பள உயர்வை வலியுறுத்தி தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 12,500 டாகாவிலிருந்து 30,000 டாகா வரை உயர்த்துமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய வருமானம் உணவு, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் சுகாதாரச் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முக்கிய விடயங்கள்
- குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 டாகாவிலிருந்து 30,000 டாகாவாக, அதாவது 140 சதவீத சம்பள உயர்வை தொழிலாளர்கள் கோருகின்றனர்.
- சவார், அஷூலியா மற்றும் காசிப்பூர் உள்ளிட்ட பிரதான ஆடை உற்பத்தி மையங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
- ஞாயிற்றுக்கிழமை (15) அன்று 121 தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதுடன், 65 தொழிற்சாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன.
- சுமார் நான்கு மில்லியன் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் இத்துறை, நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை வகிக்கிறது.
நெடுஞ்சாலை மறியலும் பொலிஸாரின் நடவடிக்கைகளும்
தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்ததுடன், முக்கிய பாதைகளையும் மறித்ததால் வார இறுதியில் பதற்றமான சூழல் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை (15) காசிப்பூரில் உள்ள டாக்கா, தங்காயில் நெடுஞ்சாலையை சுமார் ஒரு மணி நேரம் போராட்டக்காரர்கள் மறித்த நிலையில், பொலிஸார் தலையிட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.
பங்களாதேஷ் ஊடக அறிக்கைகளின்படி, ஞாயிற்றுக்கிழமை 121 தொழிற்சாலைகளில் பணிகள் நிறுத்தப்பட்டதுடன், உள்ளூர் தொழிலாளர் சட்ட விதிகளின் கீழ் 65 தொழிற்சாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன.
காலவரையற்ற மூடல்களுக்கான அச்சுறுத்தல்
தொடர்ச்சியான அமைதியின்மை காரணமாக, 'வேலையின்றி சம்பளமில்லை' என்ற தொழிலாளர் சட்ட விதிகளின் கீழ் ஆடைத் தொழிற்சாலைகளைக் காலவரையறையின்றி மூட நேரிடும் என தொழிற்சாலை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த முட்டுக்கட்டை நிலைக்குத் தீர்வு காணும் நோக்கில், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளுடன் இணைந்து குறைந்தபட்ச சம்பளத்தை மீளாய்வு செய்வதற்காக பங்களாதேஷ் அரசாங்கம் சம்பளச் சபை ஒன்றை அமைத்துள்ளது.
சுமார் நான்கு மில்லியன் தொழிலாளர்களைக் கொண்டுள்ளதும், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதுமான பங்களாதேஷின் ஆடை ஏற்றுமதித் துறைக்கு இந்த நெருக்கடி கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய ஆடை வர்த்தக நாமங்களுக்கு ஏற்றுமதி செய்வதில் பங்களாதேஷ் இலங்கைக்கு ஒரு பிரதான போட்டியாளராகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.






