கஹட்டகஸ்திகிலிய, கும்புக்வெவ பகுதியில் தந்தம் அகற்றப்பட்ட நிலையில் யானையொன்று உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அடுத்து, 34 வயதுடைய முன்னாள் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஒருவரை கஹட்டகஸ்திகிலிய வனஜீவராசிகள் வலைய அலுவலக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த யானையின் தந்தத்தை துண்டித்து அகற்றிய சம்பவத்துடன் குறித்த நபருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆயுதங்களும் உபகரணங்களும் மீட்பு
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபரின் வீடு மற்றும் அவரது பயிர்ச்செய்கை வாடி ஆகிய இடங்களில் வனஜீவராசிகள் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெடிமருந்து மற்றும் உபகரணங்கள், அலிவெடி மற்றும் பெற்றோல் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெடிபொருள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும், ஒரு வளைந்த கத்தி, குறித்த யானை காணப்பட்ட இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் மரக்குற்றிகள் மற்றும் இரும்புகளை வெட்டும் ரம்பம் ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். யானையின் தந்தத்தை அறுத்து எடுப்பதற்கு இந்த ரம்பமே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
நீதிமன்றத்தால் விளக்கமறியல்
சந்தேகநபர் இன்று (05) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
யானையின் உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.






