தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாகம் மற்றும் மனித வள முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர்களில் ஒருவரான அருமகுட்டி மனுல சமல் பெரேரா என்பவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (04) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுக்கு 51 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய விடயங்கள்

  • அம்பாறை சாமபுர காணியொன்றை குத்தகைக்கு எடுப்பதற்கு 38 இலட்சம் ரூபாவும், புனரமைப்புக்கு 13 இலட்சம் ரூபாவும் முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
  • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை
  • வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதற்கும் தடை

அம்பாறை காணி கொடுக்கல் வாங்கல்

அம்பாறை மாவட்டத்தின் சாமபுர கிராமத்தில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டடம் ஒன்று தொடர்பான கொடுக்கல் வாங்கலே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாகும். குறித்த சொத்து அரசாங்கத்தின் காணி எனக் காட்டி, உப குத்தகை ஒப்பந்தங்கள் ஊடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குப் பெற்றுக்கொள்வதற்கு சந்தேகநபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன் அதற்காக மூன்றாம் தரப்பொன்றுக்கு 38 இலட்சம் ரூபா முறைகேடாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும், நிர்வாக சபையின் அனுமதியின்றி கட்டடத்தைப் புனரமைப்பதற்காக மேலும் 13 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. அதற்கமைய ஏற்பட்ட மொத்த நட்டம் 5.1 மில்லியன் ரூபாவாகும்.

அலுவலகத்திற்குள் நுழைவதற்கும் தடை

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை, தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. அவரது வெளிநாட்டுப் பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர் இன்னும் அங்கு பணியாற்றி வருவதால், அடுத்த வழக்கு விசாரணைத் திகதி வரை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதற்கும் நீதவான் அவருக்கு முற்றாகத் தடை விதித்தார்.

அடுத்தது என்ன?

சம்பவம் தொடர்பான வழக்கு ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.