புகைப்படப் பிரதி கடதாசிகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, இந்தியாவில் இருந்து நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 792 மில்லியன் ரூபா பெறுமதியான பெருந்தொகை வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

இது மிகவும் நுட்பமான முறையில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பாரிய அளவிலான கடத்தல் நடவடிக்கை என்பது சுங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த கொள்கலனின் இறக்குமதி ஆவணங்களில், அதற்குள் புகைப்படப் பிரதி கடதாசிகளும் சாதாரண கடதாசிகளும் இருப்பதாக கடத்தல்காரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த கொள்கலனை கந்தானை பகுதியில் உள்ள போலி முகவரியைக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு கொண்டு செல்வதே அவர்களின் அடுத்த திட்டமாக இருந்துள்ளது. எனினும், சுங்க அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பினால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

குறித்த கொள்கலனை கடுமையான சோதனைக்கு உட்படுத்தியபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 457 வெளிநாட்டு சிகரெட் அட்டைப்பெட்டிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான சட்டவிரோதப் பொருட்கள் கடத்தலைத் தடுப்பதற்காக இலங்கை சுங்கம் தற்போது தீவிர சோதனைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஏனைய வலையமைப்பை கண்டறிவதற்காக சுங்க மத்திய புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.