இலங்கையில் தீவிரமடைந்து வரும் மனித - யானை மோதலை தீர்ப்பதற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவத்தை பயன்படுத்தும் புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்கமுவ பகுதியில் இன்று இடம்பெற்ற விசேட வட்டமேசை கலந்துரையாடலின் போது இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கல்கமுவ பேச்சுவார்த்தையில் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்பு
சீன தூதுவர் வெய் ஹுவாசியாங் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் சந்தன திசாநாயக்க மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.
மனித - யானை மோதல்களை குறைப்பதற்கான நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் இலங்கை - சீனா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை கட்டியெழுப்புவது குறித்து இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
ஸ்மார்ட் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்க முன்வந்த ஹுவாவே நிறுவனம்
சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவேயின் நிபுணர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இந்த நெருக்கடிக்கு நடைமுறை தீர்வுகளை உருவாக்க சீனாவின் ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள், நிபுணத்துவம் மற்றும் முன்னைய அனுபவங்கள் எவ்வாறு உதவக்கூடும் என்பது குறித்த பெறுமதிமிக்க தகவல்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
உள்ளூர் கிராம மக்களுக்கும் காட்டு யானைக் கூட்டங்களுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைத்து, மனிதர்களும் யானைகளும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே இந்த பேச்சுவார்த்தைகளின் இறுதி இலக்கு என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.






