சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) தலைவராக ஜே ஷா இரண்டாவது முறையாகவும் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற பணிப்பாளர் சபை கூட்டங்களின் போது பணிப்பாளர்கள் முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் உலகளாவிய விரிவாக்கம், பார்வையாளர்களை ஈர்த்தல் மற்றும் வர்த்தக ரீதியான அபிவிருத்திக்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவரது தலைமைத்துவம் தொடர்ச்சியாக அவசியம் என ஐசிசி பணிப்பாளர் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
2028 ஒலிம்பிக் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்
2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் இணைக்கப்படுவதன் ஊடாக, புதிய பார்வையாளர்களையும் புதிய தலைமுறை வீரர்களையும் உருவாக்க வாய்ப்பு கிடைக்கும் என பேரவை தெரிவித்துள்ளது.
மகளிர் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சி, இணை உறுப்பு நாடுகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குதல், கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் நீண்டகால இருப்பிற்காக நிலையான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜே ஷா வெளியிட்ட கருத்துகள்
மீண்டும் தெரிவு செய்யப்பட்டது குறித்து கருத்து வெளியிட்ட ஜே ஷா, தன் மீது நம்பிக்கை வைத்த பணிப்பாளர் சபைக்கு நன்றி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் மிக முக்கியமானதும் உற்சாகமானதுமான ஒரு காலகட்டத்திற்குள் பிரவேசித்து வருவதாகவும், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் கிரிக்கெட்டை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு கிடைத்த ஒரு விசேட வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத்தை மேலும் வலுவானதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கு உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






