காவன்திஸ்ஸ யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உண்மைத் தகவல்களைக் கண்டறிய விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி தானும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடந்த 23 ஆம் திகதி சபாநாயகரிடம் பிரேரணையொன்றைக் கையளித்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அக்கோரிக்கையின் பின்னர் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மூன்று தடவைகள் கூடியபோதிலும், அப்பிரேரணை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேறு பிரேரணைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது

தமது பிரேரணையைப் புறந்தள்ளி, அதன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய பிரேரணைகளுக்குக் கூட முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார். காவன்திஸ்ஸ யானை உள்ளிட்ட வனவிலங்கு வளங்கள் தொடர்பான தேசிய முக்கியத்துவத்திற்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றக் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடை ஏற்பட்டுள்ளதுடன், இது வரப்பிரசாத மீறலாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதற்கமைய, இந்த முறைப்பாட்டை ஒழுக்கவியல் மற்றும் வரப்பிரசாதங்கள் பற்றிய குழுவுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.