கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து தெற்கு ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகொன்றில் இருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் தொகுதி மீட்கப்பட்டுள்ளது. நேற்று (04) கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்தப் படகு இன்று (05) காலை திக்கோவிற்ற மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அதிலிருந்த 10 உரைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் திக்கோவிற்ற துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய விடயங்கள்
- படகில் இருந்து 100 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் 50 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு
- படகில் இருந்த 5 மீனவர்கள் திக்கோவிற்ற மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்
- போதைப்பொருளின் தெருப் பெறுமதி 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தகவல்
பிரதி அமைச்சர் தெரிவித்த தகவல்கள்
திக்கோவிற்ற மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்தத் தொகுதியில் 100 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் 50 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் அடங்கியுள்ளதாகக் கூறினார். இதன் தெருப் பெறுமதி 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார். கடற்படையினரால் இந்த போதைப்பொருள் தொகுதி தற்போது எடையிடப்பட்டு கணக்கிடப்பட்டு வருகின்றது.
போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், கடத்தல்காரர்களின் செயற்பாடுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
போதைப்பொருள் சோதனைகளின் புள்ளிவிவரங்கள்
2025 ஆம் ஆண்டில் கடற்படையினர் 75 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் சோதனைகளை முன்னெடுத்துள்ளதுடன், 'ஒரே நாடு' திட்டத்தின் கீழ் 109 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டின் கடந்துவந்த காலப்பகுதியில் மாத்திரம் கடற்படையின் நடவடிக்கைகளால் 69 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறினார்.
முழுமையான சோதனைகளில் 314,200 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,050 பேர் முக்கிய வலையமைப்பாளர்கள் ஆவர். 11 பலநாள் படகுகள் உட்பட 63 படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு 353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பான தகவல்களை 1818 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்
- கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் மீட்பு
- இரண்டாவது திருமணத்திற்கு தயாரான முன்னாள் காதலியை வீட்டிலேயே கொன்று காதலனும் தூக்கிட்டு தற்கொலை
- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலேயின் வழிநடத்தலில் மேலும் மூவரின் அனுசரணையுடன் இடம்பெற்றது: குற்றப் புலனாய்வுத் திணைக்களம்






