14 நாட்கள், 1,000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்த இந்த நாடு தழுவிய பயணம் ஹிக்கடுவையில் உள்ள Hikka Tranz by Cinnamon ஹோட்டலில் உற்சாகமான நிறைவு நிகழ்வுடன் முடிவடைந்தது. இந்தியா மற்றும் கம்போடியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பின்னர், 8வது ஆண்டாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் 2026 ஆம் ஆண்டுக்கான TukTuk Tournament, tuktukrental.com நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
டிரிப் அட்வைசர் பயணிகளின் விருப்பத் தெரிவுக்கான 'Best of the Best' விருதை வென்றதும், உலகளாவிய ரீதியில் சுற்றுலா வர்த்தகங்களில் முதல் 10 சதவீதத்திற்குள் அடங்குவதுமான இந்த அனுபவப் பயண முயற்சி, நாட்டைச் சுற்றிப் பார்ப்பதற்காக 27 நாடுகளைச் சேர்ந்த 94 அணிகளில் 218 பயணிகளை ஒன்றிணைத்தது.
முக்கிய அம்சங்கள்
- 27 நாடுகளைச் சேர்ந்த 94 அணிகளிலுள்ள மொத்தம் 218 பயணிகள் 14 நாட்கள் கொண்ட 1,000 கிலோமீட்டர் பயணத்தை நிறைவுசெய்தனர்.
- உள்ளூர் குடும்பங்களின் வருமானத்திற்கு உதவும் வகையில் ஒவ்வொரு முச்சக்கரவண்டியும் நேரடியாக உள்ளூர் உரிமையாளர்களிடமிருந்தே வாடகைக்கு பெறப்பட்டது.
- போட்டிப் புள்ளிகள் மூலம் இதுவரை 228 சுத்தமான குடிநீர் இணைப்புகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஒரு பயணிக்கு 1 கிலோகிராம் என்ற வீதத்தில் கடலில் சேரும் பிளாஸ்டிக் அகற்றப்பட்டது.
கிராமியப் பாதைகளும் உள்ளூர் தங்குமிடங்களும்
பயணப் பருவம் அல்லாத காலங்களில் மெதுவான பயண அனுபவத்தை ஊக்குவிக்கவும், சாதாரண சுற்றுலாப் பயணிகளை விட அதிக நாட்கள் தங்க வைக்கவும் இந்த விளையாட்டுப் பாணியிலான பயணம் திட்டமிடப்பட்டது. இந்தப் பயணம் வத்தளையிலுள்ள Pegasus Reef ஹோட்டலில் ஆரம்பமாகி, கண்டியிலுள்ள Cinnamon Citadel ஊடாகச் சென்று, ஹிக்கடுவையிலுள்ள Hikka Tranz ஹோட்டலில் நிறைவடைந்தது.
அணிகள் தமது இரவுகளை உள்ளூர் வீடுகள், விடுதிகள், சொகுசு வில்லாக்கள் மற்றும் நட்சத்திரத் தகுதி ஹோட்டல்களில் கழித்தன. ஏற்பாட்டாளர்கள் முச்சக்கரவண்டிகள் அனைத்தையும் நேரடியாக உள்ளூர் உரிமையாளர்களிடமிருந்து வாடகைக்கு எடுத்ததன் மூலம், சுற்றுலாத்துறை வருமானத்தை வழக்கமான சுற்றுலாப் பாதைகளுக்கு அப்பாலுள்ள கிராமங்களுக்கும் அடிமட்ட குடும்பங்களுக்கும் நேரடியாகக் கொண்டு சேர்த்தனர்.
குடிநீர் விநியோகமும் கடல் சுத்திகரிப்பும்
இந்தப் பயணத்துடன் இணைந்து சமூக மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. போட்டியின் போது பெறப்பட்ட புள்ளிகள், PALM Foundation ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள குடும்பங்களுக்கு நிலையான சுத்தமான குடிநீர் விநியோகமாக மாற்றப்பட்டதுடன், இதுவரை 228 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
Zero Plastic Movement அமைப்புடன் இணைந்து, ஒவ்வொரு பயணிக்கும் தலா 1 கிலோகிராம் என்ற வீதத்தில் கடலில் சேரக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு சர்வதேச வர்த்தக நாமங்களான Red Bull மற்றும் Valvoline ஆதரவு வழங்கியிருந்தன.






