ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்கு பதிலளிக்கும் போதே வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதற்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் (CID) முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முக்கிய விடயங்கள்
- ஸ்லிட் நிறுவனத்தின் முகாமைத்துவத்தை மஹபொலவிற்கு கையகப்படுத்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- தொடர்புடைய சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் இலஞ்ச ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை அம்பலமானது.
- 2005 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியின் இலாபமான 1,068 மில்லியன் ரூபாயில் மஹபொலவிற்கு 408 மில்லியன் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.
- 5,000 ரூபாவாக இருந்த மஹபொல கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி காலத்து ஒப்பந்தமும் தலைமை நீதியரசரின் இராஜினாமாவும்
2015 நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்த அமைச்சர், அக்காலப்பகுதியில் அந்த அரசாங்கத்தின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச செயற்பட்டதை நினைவுகூர்ந்தார். இந்த தவறான ஒப்பந்தம் காரணமாக, அக்காலப்பகுதியில் மஹபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவராக இருந்த முன்னாள் தலைமை நீதியரசர் கே. ஸ்ரீபவன் இராஜினாமா செய்தார் என்றும் அவர் வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் இரண்டு வருடங்கள் வரை மஹபொல நம்பிக்கை நிதியம் எவ்வித கூட்டங்களையும் கூட்டவில்லை எனவும், பின்னர் முன்னாள் தலைமை நீதியரசர் ஒருவர் அல்லது கணக்காய்வாளர் நாயகம் ஒருவரின் கீழ் அதனை மீண்டும் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார்.
நிதிப் பிரச்சினையும் மஹபொல கொடுப்பனவு அதிகரிப்பும்
2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் ஸ்லிட் நிறுவனத்தின் தக்கவைக்கப்பட்ட இலாபம் 1,068 மில்லியன் ரூபாயாக இருந்த போதிலும், கையளிக்கப்பட்ட போது மஹபொலவிற்கு 408 மில்லியன் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான நிதியத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்துவது பாரதூரமான குற்றம் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது ஒரு மாணவருக்கு 5,000 ரூபாவாக வழங்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தற்போது நூறு வீதத்தினால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாவாக உயர்த்தப்பட்டு தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.






