நாராஹேன்பிட்டியவில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதற்கு தொடர்ச்சியான தயார்நிலை அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டம் பிரதமரின் தலைமையிலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுண ஆராச்சியின் முன்னிலையிலும் இடம்பெற்றது. கடந்த நவம்பர் 6 ஆம் திகதி பெய்த கடும் மழையைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தைப் பாதித்த வெள்ளம் மற்றும் அனர்த்த நிலைமைகளை மீளாய்வு செய்வதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

நீண்டகாலமாக நிலவும் நகர சவால்கள்

கொழும்பு நகரின் கட்டமைப்பு மற்றும் அதன் புவியியல் அமைவு என்பன வெள்ள முகாமைத்துவத்தை மிகவும் சவாலானதாக்குகின்றன என பிரதமர் தெரிவித்தார். பல வருடங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளே இன்றைய நிலைக்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கழிவு முகாமைத்துவம், முறையான குப்பை அகற்றல், கால்வாய்களைப் பராமரித்தல் மற்றும் தாழ்நிலப் பகுதிகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவானதொரு மூலோபாயத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நீர்நிலைகளைச் சுத்தப்படுத்துவது என்பது வெள்ளம் ஏற்படும் போது மட்டும் அவசர நடவடிக்கையாக முன்னெடுக்கப்படக் கூடாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னெடுக்கப்படும் பாரிய திட்டங்கள்

மழைநீர் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய திட்டங்கள் குறித்து கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார குழுவுக்கு விளக்கமளித்தார்.

களனி கங்கை வடிநில வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 15 பில்லியன் ரூபாவுக்கும் அதிக செலவில் முன்னெடுக்கப்படும் கொலன்னாவ வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் கடுவலையில் 450 மில்லியன் ரூபா செலவிலான நீர்வழித் திட்டம் ஆகியவை இதில் அடங்குகின்றன. மேலும், கொலன்னாவையிலுள்ள நான்கு பிரதான கால்வாய்களைப் புனரமைத்தல், நீர்ப்பாசனத் திணைக்களத்தால் களனி கங்கையின் கரைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், கிராமிய வீதி அபிவிருத்திப் பணிகள் மற்றும் பிரஜா சக்தி திட்டம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.