வைத்தியசாலை நிர்வாக செயற்பாடுகளை வினைத்திறனாக்கி, மக்களுக்கு உயர் தரத்திலான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், நாட்டின் பிரதான ஐந்து வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கும் நிகழ்வு நேற்று (02) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைக் குழு வழங்கிய அனுமதியின் பிரகாரம், சிரேஷ்ட நிர்வாக தரத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நியமிக்கப்பட்ட புதிய பணிப்பாளர்கள் விபரம்

புதிய நியமனங்களின்படி, கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக டொக்டர் டபிள்யு. எம். யூ. எஸ். விஜேமான்ன அவர்களும், கொழும்பு வடக்கு (ராகம) போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக டொக்டர் டி. ஏ. கே. பெரேரா அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக டொக்டர் டபிள்யு. ஏ. பி. பி. ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக டொக்டர் ஜி. சுகுணன் அவர்களும், பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக டொக்டர் டபிள்யு. எம். சி. எம். விஜேசிங்க அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரிகள்

சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்து இந்நிகழ்வின் போது புதிய அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, மேலதிக செயலாளர் ஜி. எம். ஜனக கித்சிறி குணவர்தன மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) டொக்டர் சாகரி கிரிவந்தெனிய ஆகியோர் கலந்துகொண்டனர்.