பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் தொடர்பான விவாதத்தின் போது, தேசிய அணியின் தெரிவுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையான கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளார். வீரர்களின் உண்மையான திறமைக்கு முன்னுரிமை அளிக்கும், வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான முறைமையை உருவாக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அணி மனப்பான்மை குறைவு போன்ற தெளிவற்ற காரணங்களைக் கூறி, சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஏன் அணியிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என்று பிரேமதாச கேள்வி எழுப்பினார். சிறப்பாக விளையாடும் ஒரு வீரரை அணியிலிருந்து நீக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் சரியான முறையில் நியாயப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னைய ஜாம்பவான்களிடமிருந்து பாடங்கள்
தனது கருத்தை வலியுறுத்துவதற்காக, கடந்த தசாப்தங்களில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் வீரர்களின் தகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தெரிவுகளை மேற்கொண்டதன் மூலம் உலக கிரிக்கெட்டில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பதை பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பக்கச்சார்பான நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்த அவர், பாடசாலை வலையமைப்புகள், குடும்ப தொடர்புகள், சமூக பின்னணி மற்றும் பிரதேச ரீதியான வேறுபாடுகள் ஒருபோதும் தேசிய அணித் தெரிவுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.
சீர்திருத்தங்கள் தோல்வியடையக் கூடாது
இலங்கை கிரிக்கெட்டை அரசியலற்றதாக்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் தற்போதைய நடவடிக்கைகளை வரவேற்ற எதிர்க்கட்சித் தலைவர், பெற்ற ஓட்டங்கள் மற்றும் வீழ்த்திய விக்கெட்டுகள் போன்ற அளவிடக்கூடிய காரணிகளை மாத்திரம் கவனத்தில் கொள்ளுமாறு தீர்மானம் எடுப்போரை வலியுறுத்தினார்.
தற்போதைய கிரிக்கெட் மறுசீரமைப்பு முயற்சிகள் சீர்குலைவதற்கு இடமளிக்க முடியாது என்று குறிப்பிட்ட பிரேமதாச, தேர்வாளர்களிடமிருந்து முழுமையான வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் கோரினார்.






