இலங்கை மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் மூலமான நட்புறவு 100 ஆண்டுகளை எட்டுவதைக் கொண்டாடும் வகையில் விசேட நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (23) பிற்பகல் MCA வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விசேட நிகழ்வில் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் கலந்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெலிங்டன் போட்டியும் விசேட கொண்டாட்டங்களும்

இரு நாடுகளுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகள் யாவும், 2027 பெப்ரவரி 12 ஆம் திகதி நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமாகும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு இணையாக முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையின் 100 கிரிக்கெட் ரசிகர்களுக்கு 11 நாட்கள் கொண்ட நியூசிலாந்து விஜயமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், 1996 உலகக் கிண்ண அணியின் உறுப்பினர்களை உள்ளடக்கிய அர்ஜுன ரணதுங்கவின் அணிக்கும் நியூசிலாந்து சிரேஷ்ட வீரர்களுக்கும் இடையில் கண்காட்சிப் போட்டியொன்றும் நடைபெறவுள்ளது. இதற்கு மேலதிகமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும் இதன் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.