இலங்கையைத் தனது தாய்நாடு எனப் பெருமையுடன் கூறுவதற்கு இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு முழு உரிமை உண்டு என்றும், அதற்கு யாரிடமிருந்தும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையை ஒரு பௌத்த நாடு என அழைப்பது குறித்து கோபமடைவதற்கு எவ்வித காரணமும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்கள் பௌத்த தர்மத்தினால் போஷிக்கப்பட்ட கலாசார மரபுரிமையின் ஒரு பங்காளியாக இருப்பதில் தானும் பெரும் பெருமை அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான நிலைப்பாடு
அண்மைக்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய கருத்தை வெளியிட்ட நபர் தனது சொந்தக் கருத்தையே கூறியுள்ளதாகவும், முழு முஸ்லிம் மக்களுக்காகவும் பேசுவதற்கு அவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், அந்தக் கருத்தினால் மனமுடைந்த மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 9, 10 மற்றும் 12 ஆம் உறுப்புரைகளின் மூலம் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ள அதேவேளையில், ஏனைய மதச் சுதந்திரமும் சமத்துவமும் பாதுகாக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் அவர் தனது பதிவில் நினைவுகூர்ந்துள்ளார்.
“ஒருவரின் வார்த்தைகளுக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் தாக்குவதற்கு ஒரு காரணமாக அமைத்துக் கொள்ளாதீர்கள். உங்களது சுப மற்றும் அசுப நிகழ்வுகளுக்கு வருகை தந்து, துன்ப வேளைகளில் உங்களுடன் துணை நின்ற முஸ்லிம் அயலவர்கள் பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.”
அயலவர் உறவுகள் பற்றிய நினைவூட்டல்
தனிநபர் ஒருவர் கூறிய விடயத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு முழு முஸ்லிம் சமூகத்தையும் தாக்குவதற்கு முனைய வேண்டாம் எனப் பௌத்த மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள முன்னாள் அமைச்சர், இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருந்த முஸ்லிம் அயலவர்கள் குறித்து ஒரு கணம் சிந்தித்துப் பார்க்குமாறும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






