இலங்கை சட்டமா அதிபர் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ரஷ்ய சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சன் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றார். எனினும், புதுக்கடையிலுள்ள சட்டமா அதிபர் திணைக்கள வளாகத்தில் இச்சந்திப்பை நடத்துவதை அவர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புக் காரணங்களே இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகின்றது.
முக்கிய விடயங்கள்
- பாதுகாப்புக் காரணங்களினால் ரஷ்ய சட்டமா அதிபர் புதுக்கடை சட்டமா அதிபர் திணைக்களத்திற்குச் செல்வதை நிராகரித்துள்ளார்.
- சட்டமா அதிபர் திணைக்களத்திற்கோ அல்லது இலஞ்ச ஆணைக்குழுவிற்கோ செல்ல வேண்டாம் என முன் கூட்டியே வருகை தந்த பாதுகாப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது.
- வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ள போதிலும், சந்திப்பு நடைபெறும் இடம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
- அலெக்சாண்டர் குட்சன் தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் நாட்டை வந்தடையவுள்ளார்.
பாதுகாப்புக் குழுவின் அறிவுறுத்தல்
இந்த விஜயத்திற்கு முன்னதாக நாட்டிற்கு வருகை தந்த முன் பாதுகாப்பு ஏற்பாட்டுக் குழு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கோ அல்லது இலஞ்ச ஆணைக்குழுவிற்கோ செல்ல வேண்டாம் என ரஷ்ய சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன், அலெக்சாண்டர் குட்சன் தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவுடனான சந்திப்பு
எவ்வாறாயினும், எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாட ரஷ்ய சட்டமா அதிபர் திட்டமிட்டுள்ளார்.
அங்கு வழக்குத் தொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ள போதிலும், அந்தச் சந்திப்பு இடம்பெறும் இடம் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.






