பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி, மனிதவளம் மற்றும் மனித மூலதனம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது இலங்கை கிரிக்கெட் சட்டமூலம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகள், இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திறமைக்கு முன்னுரிமை அளியுங்கள்
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுக்கு பங்களிப்புச் செய்த முன்னாள் வீரர்களுக்கு வெளிப்படையாக கருத்துத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். இத்தகைய வெளிப்படையான களம் ஒன்றின் மூலம் தெரிவுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கண்ணுக்குத் தெரியாத காரணிகளுக்குப் பதிலாக திறமைகள் மற்றும் ஓட்டங்களை குவிப்பது போன்ற விடயங்கள் குறித்தே கவனம் செலுத்தப்பட வேண்டும். கிராமப்புற பகுதிகளைப் புறக்கணித்து, குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு மட்டும் சாதகமாகச் செயல்படும் நிலைமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
70-80களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி திறமைக்கு முன்னுரிமை அளித்ததன் மூலமே முன்னிலைக்கு வந்தது என்பதை நினைவுகூர்ந்த சஜித் பிரேமதாச, கிரிக்கெட் துறையில் அரசியலை நீக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைப் பாராட்டினார்.
ICC நிபந்தனைகள் குறித்து தெளிவுபடுத்தல்
சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கிரிக்கெட் தொடர்கள் இல்லை என வெளியாகும் தகவல்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சமூகத்தில் பரப்பப்படும் இத்தகைய விடயங்கள் குறித்து சரியான தெளிவுபடுத்தல் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
புதிய சட்டம் திருத்தப்பட்ட பின்னர் ஐசிசி (ICC) அதற்கு இணங்காவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும், அத்தகைய பிரச்சினை ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.






