தொழில் நிமித்தம் வௌிநாடு செல்லத் திட்டமிடும் அனைவருக்கும் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் விசிட் விசா ஊடாக இலங்கையை விட்டு வௌியேற வேண்டாம் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இன்று (11) வெளியிட்டுள்ள பொது அறிவித்தலில் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
போலியான வேலை வாய்ப்பு வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு பெருமளவிலான இலங்கையர்கள் வௌிநாடுகளில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
முக்கிய விடயங்கள்:
- விசிட் விசா மூலம் டுபாய், மலேசியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பல இலங்கையர்கள் தற்போது பெரும் துன்பங்களுக்கு ஆளாகித் தவிக்கின்றனர்.
- விசிட் விசாவை தொழில் விசாவாகக் கருத முடியாது, அத்துடன் விசிட் விசாவில் வேலை செய்வது அந்நாட்டுச் சட்டங்களை மீறும் செயலாகும்.
- பயணிகள் கைது செய்யப்படுதல், சம்பளம் வழங்கப்படாமை, கடவுச்சீட்டுகளை இழத்தல், நாடுகடத்தப்படுதல் மற்றும் ஆட்கடத்தல் போன்ற ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.
- பொதுமக்கள் சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றி, நாட்டை விட்டு வௌியேறுவதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்ய வேண்டும்.
மலேசியா, டுபாய் மற்றும் ஓமானில் பாரிய நெருக்கடிகள்
விசிட் விசா மூலம் மலேசியா, டுபாய் மற்றும் ஓமான் போன்ற நாடுகளுக்குச் சென்ற பெருமளவிலான இலங்கையர்கள் தற்போது கடுமையான இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அமைச்சு வௌிப்படுத்தியுள்ளது.
விசிட் விசா என்பது எக்காரணம் கொண்டும் தொழில் விசா அல்ல என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இத்தகைய விசாவில் தொழில் செய்வது சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டங்களை மீறுவதோடு மட்டுமல்லாமல் தடுத்து வைக்கப்படுதல், கைது செய்யப்படுதல், நாடு கடத்தப்படுதல், மோசடி மற்றும் ஆட்கடத்தல் போன்ற கடுமையான ஆபத்துகளுக்கும் வழிவகுக்கும்.
வழங்கப்படாத சம்பளமும் விசா மாற்றப் பொறிகளும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வேலைகள் கிடைப்பதில்லை என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பலர் சம்பளம் வழங்கப்படாமை, சம்பளக் குறைப்பு, கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்படுதல் மற்றும் கடுமையான நிதி நெருக்கடிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
வௌிநாடு சென்றடைந்த பின்னர் விசிட் விசாவை வேலை விசாவாக மாற்றிக்கொள்ளலாம் என்றோ, அங்கு சென்றதும் வேலை ஒழுங்கு செய்யப்படும் என்றோ கூறப்படும் போலி வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் எனப் பொதுமக்களுக்குக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யுங்கள்
தொழில் தேடுபவர்கள் அனைவரும் முறையான ஆட்சேர்ப்பு வழிகளைப் பின்பற்றுமாறும், நாட்டை விட்டு வௌியேறுவதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) கட்டாயம் பதிவு செய்யுமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு, நிதி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி முறையான சட்டபூர்வ பாதையைப் பின்பற்றுவது மட்டுமே என்று அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.






