டெல்லியின் புறநகர்ப் பகுதியில் இயங்கி வந்த பாரிய மனிதக் கடத்தல் மற்றும் இணையவழி மோசடி வலையமைப்பை இந்திய பொலிஸார் முறியடித்துள்ளனர். இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மொத்தம் 164 வெளிநாட்டு ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் தகவல்படி, அதிக சம்பளம் தரும் தகவல் தொழில்நுட்ப வேலைகள் தருவதாகக் கூறி இவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் அங்கு வந்தடைந்ததும் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, நொய்டாவில் அவர்களது விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முக்கிய விடயங்கள்
- நொய்டாவிலிருந்து இந்தோனேசியாவைச் சேர்ந்த 92 பேர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த 72 பேர் உட்பட 164 வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
- மலேசிய ஊழியர் ஒருவர் அங்கிருந்து தப்பித்து, இந்த முழு மோசடித் திட்டம் குறித்தும் தகவல் வழங்கினார்.
- கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, முதலீட்டு மோசடிகளை மேற்கொள்வதற்காகப் பெண்கள் போன்று ஆள்மாறாட்டம் செய்ய ஊழியர்கள் வற்புறுத்தப்பட்டனர்.
- பொலிஸார் சுமார் 550 கணினிகள் மற்றும் தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளதுடன், மலேசிய நாட்டவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இணைய மோசடிகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டமை
மலேசிய ஊழியர் ஒருவர் தப்பிச் சென்று அதிகாரிகளுக்கு இந்த மோசடி வலையமைப்பு தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய பின்னரே இந்நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்தது.
தாங்கள் நொய்டாவில் தடுத்து வைக்கப்பட்டு, போலி முதலீட்டு மோசடிகளில் மக்களை ஏமாற்றி சிக்க வைப்பதற்காக இணையத்தளங்களில் பெண்கள் போல ஆள்மாறாட்டம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதுவரை, மலேசிய நாட்டவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சுமார் 550 மேசைக் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
"சமூகப் பொறியியல், அச்சுறுத்தல் அல்லது ஆள்மாறாட்டம் மூலம் பயனாளர்களை ஏமாற்றுதல்"இந்திய ரிசர்வ் வங்கி
இணையக்குற்றங்களின் அதிகரிப்பு
லக்னோ மற்றும் பிதாம்புராவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வட இந்தியாவில் சர்வதேச அழைப்பு நிலையங்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான சோதனைகளின் ஓர் அங்கமாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
தேசிய இணையக்குற்றப் பதிவு இணையத்தளத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 2.8 மில்லியன் இணைய மோசடி முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், சுமார் 22,495 கோடி ரூபா (2.42 பில்லியன் அமெரிக்க டொலர்; 1.85 பில்லியன் பவுண்) இழப்பு ஏற்பட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டிலிருந்து முறைப்பாடுகளில் 4,000 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பைக் காட்டுகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை
இது விரிவானதொரு உலகளாவிய இணைய மோசடி வலையமைப்பாக இருக்கக்கூடுமா என்பது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.






