பாக்கு நீரிணைக்கு அப்பால் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய முன்னணி நிறுவனமான JSW குழுமம், தனது JSW Motors பிரிவின் ஊடாக பயணிகள் கார் சந்தையில் காலடி எடுத்து வைக்கின்றது. சீன வாகன உற்பத்தி நிறுவனமான Chery இன் Jetour பிராண்டிற்குரிய Jetour T2 மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட JSW Combat எனும் புதிய SUV காரை அந்நிறுவனம் வெளியிடவுள்ளது.

சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான, அதாவது 27,000 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான விரிவான வாகன உற்பத்தி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த பாரிய தொகை குறித்த ஒரு SUV காருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், JSW இன் ஒட்டுமொத்த வாகன உற்பத்தி இலக்குகளையும் உள்ளடக்கியுள்ளது.

முக்கிய விபரங்கள்

  • JSW Motors நிறுவனம் JSW Combat SUV காரை 2026 டிசம்பர் 3 ஆம் திகதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • இந்த வாகனம் சீன வாகன உற்பத்தியாளரான Chery இன் Jetour T2 மாடலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் 600 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு 500,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆரம்ப கொள்ளளவுடன் கூடிய தொழிற்சாலையை JSW அமைத்து வருகின்றது.
  • இந்த பிளக்-இன் ஹைப்ரிட் (Plug-in hybrid) வாகனத்திற்காக 50 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு உதிரிப்பாக விநியோகஸ்தர்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் மெகா உற்பத்தி ஆலை

NDTV தகவல்களின்படி, மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த உற்பத்தி வளாகத்தை JSW அமைத்து வருகின்றது. இந்த வளாகத்தில் கார் அசெம்பிளி, மின்கல (battery) உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் உதிரிப்பாக ஒருங்கிணைப்பு என்பன இடம்பெறவுள்ளன.

இத்தொழிற்சாலையின் ஆரம்ப உற்பத்தி திறன் ஆண்டுக்கு 500,000 வாகனங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தனது முதலாவது பிளக்-இன் ஹைப்ரிட் மாடலை ஆதரிப்பதற்காக 50 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச விநியோகஸ்தர்களை JSW Motors ஏற்கனவே ஒன்றிணைத்துள்ளது.

வாகனத்தின் வசதிகளும் விபரங்களும்

JSW Combat காரில் 1.5 லீற்றர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெற்றோல் என்ஜினுடன், இரண்டு மின்சார மோட்டார்கள் மற்றும் 18.4 kWh மின்கலத் தொகுப்பு (battery pack) அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஹைப்ரிட் அமைப்பானது சுமார் 360 குதிரைத்திறன் மற்றும் 610 Nm திருப்புவிசையை (torque) வெளிப்படுத்தக்கூடியது. மேலும், NEDC சுழற்சியின் கீழ் மின்சாரத்தின் மூலம் மாத்திரம் 90 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும்.

உட்புறத்தில், 15.6 அங்குல தொடுதிரை தகவற்பொழுதுபோக்கு அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் மேம்பட்ட சாரதி உதவி தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. JSW Motors ஏற்கனவே தனது உத்தியோகபூர்வ இந்திய இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளதுடன், இதில் நுகர்வோர் பதிவு செய்ய முடியும். எனினும், இதன் விலை விபரங்கள் மற்றும் முன்பதிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்

JSW Motors நிறுவனம் 2026 டிசம்பர் 3 ஆம் திகதி JSW Combat வாகனத்தை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆயினும், அதன் விலை மற்றும் முன்பதிவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.