குடும்பத்திற்குள் நடந்த ஒரு சாதாரண பகிடியாகத் தோன்றிய விடயம், கடுமையான சட்டப் பிரச்சினையில் முடிவடைந்துள்ளது. குடும்ப ஒன்றுகூடலின் போது, ஐந்து வயது சிறுமி ஒருவர் உணவுப் பொருளின் பெயரைத் தவறாக உச்சரித்து நகைச்சுவையாகப் பேசியதை அப்பெண் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். அது அருகிலிருந்தவர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அவர் அக்காணொளியைத் தனது பொது ஸ்னாப்சாட் கணக்கில் பதிவேற்றியுள்ளார். அது உடனடியாகப் பரவி, 11,000 இற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று ஏனைய சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இக்காணொளி குறித்து அறிந்த சிறுமியின் தந்தை, தனது மகளின் தனியுரிமை மற்றும் உளவியல் நலம் குறித்து அச்சமடைந்து உடனடியாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தார்.

முக்கிய விடயங்கள்:

  • குடும்ப ஒன்றுகூடலின் போது உணவுப் பெயரை தவறாக உச்சரித்த ஐந்து வயது சிறுமி காணொளி எடுக்கப்பட்டார்.
  • அந்த ஸ்னாப்சாட் காணொளி 11,000 இற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
  • அனுமதியின்றி சிறுமியின் படம் பகிரப்பட்டதை அறிந்த தந்தை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தார்.
  • அப்பெண்ணுக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

சைபர் குற்றங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கடுமையான குற்றச்சாட்டுகள்

வதந்திகள் மற்றும் சைபர் குற்றங்களை எதிர்ப்பதற்கான 2021 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க மத்திய ஆணைச் சட்டம் மற்றும் பொதுவாக வதீமாவின் சட்டம் என அழைக்கப்படும் சிறுவர் உரிமைகள் தொடர்பான 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க மத்திய சட்டத்தின் கீழ் அரசுத் தரப்பு வழக்குத் தொடுத்தது.

சரியான அனுமதியின்றி சிறுமியின் காணொளியை இணையத்தில் பகிர்ந்ததாகவும், சிறுமியின் உளவியல் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய கேலிசெய்தல்களுக்கு அவரை ஆளாக்கியதாகவும் அப்பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.

“ஒரு குழந்தை கமராவுக்கு முன்னால் சிரிப்பது அல்லது நகைப்பது, அவர்களின் புகைப்படம் அல்லது காணொளியைப் பகிரங்கமாகப் பகிர்வதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாக அர்த்தமாகாது” : பின் சுவைதான்

பொதுக் கணக்கு என்ற நியாயத்தை நிராகரித்த நீதிமன்றம்

நீதிமன்றத்தில், அக்காணொளியைப் பதிவு செய்து பதிவேற்றியதை ஒப்புக்கொண்ட அப்பெண், சிறுமியைக் கேலி செய்யும் நோக்கம் தமக்கு இருக்கவில்லை என்று மறுத்தார். தனது ஸ்னாப்சாட் கணக்கு பொதுவில் இருந்ததால், காணொளி தனது கட்டுப்பாட்டை மீறி வைரலாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும் அவரது வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், தவறான நோக்கம் இல்லையென்றாலும் அனுமதியற்ற பதிவேற்றத்தை நியாயப்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்தது. பொலிஸ் பதிவுகள் மற்றும் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ஒரு மாத சிறைத் தண்டனையையும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தும் உத்தரவையும் வழங்கியது.

சமூக ஊடகப் பயனர்களுக்கு சட்ட எச்சரிக்கை

பின் சுவைதான் அட்வகேட்ஸ் அண்ட் லீகல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் சட்டத்தரணி ரஷீத் பின் சுவைதான் கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் தீர்ப்பு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைகின்றது எனக் குறிப்பிட்டார். இத்தகைய காட்சிகளைப் பரப்புபவர்கள், மீள்பதிவு செய்பவர்கள் அல்லது பகிர்வார்களுக்கும் சட்டப் பொறுப்பு பொருந்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒருவரைப் பதிவு செய்வதற்கான அனுமதி கிடைத்தாலும், அதனை இணையத்தில் வெளியிடுவதற்கான உரிமையை அது வழங்காது என்று அவர் விளக்கினார். இதனைத் தெளிவான அனுமதியின்றி பதிவு இலக்கத் தகடு தெரியும்படி காரொன்றைப் புகைப்படம் எடுத்து பகிரங்கமாக வெளியிடுவதற்கு அவர் ஒப்பிட்டார்.

குறிச்சொற்கள்child videoSnapchatUAE