ஆர்மேனியாவின் அரச தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாதத்தின் போது கடுமையான அமைதியின்மை ஏற்பட்டு இருவருக்கு இடையே மோதல் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் கலந்துரையாடலில் பங்கேற்ற ஊடகவியலாளர் போரிஸ் முராசி மற்றும் அரசியல் ஆய்வாளர் ஹருத்யுன் ம்கிர்ட்சியன் ஆகிய இருவரே இவ்வாறு மோதிக்கொண்டனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் இறுதியில் கைகலப்பில் முடிவடைந்தது.

முக்கிய விடயங்கள்

  • ஊடகவியலாளர் போரிஸ் முராசி மற்றும் அரசியல் ஆய்வாளர் ஹருத்யுன் ம்கிர்ட்சியன் ஆகியோருக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டது.
  • The Great Debate என்ற அரசியல் நிகழ்ச்சியிலேயே இந்த மோதல் வெடித்தது.
  • கடந்த 13 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட இந்த மோதல், நவம்பர் 15 ஆம் திகதி எவ்வித தணிக்கையுமின்றி ஒளிபரப்பப்பட்டது.
  • வன்முறைக் காட்சிகளை ஒளிபரப்பியமை தொடர்பில் அந்நாட்டின் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தணிக்கையின்றி ஒளிபரப்பு

எதிர்க்கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் தொடர்பில் இடம்பெற்ற The Great Debate நிகழ்ச்சியின் போது, இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அவதூறாகப் பேசி விவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து பரஸ்பரம் தாக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் கடந்த 13 ஆம் திகதி நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்ட போது இடம்பெற்றதுடன், நவம்பர் 15 ஆம் திகதி குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த மோதல் எவ்வித மாற்றமுமின்றி தணிக்கை செய்யப்படாமல் அலைவரிசையால் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் விமர்சனம்

இதற்கிடையில், குறிப்பிட்ட வன்முறைக் காட்சிகளை அவ்வாறே ஒளிபரப்புவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் ஆர்மேனியாவின் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

பங்கேற்பாளர்களின் நடத்தை, விவாதத்தின் தீவிரத் தன்மை, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி அல்லது நடுநிலைமையைப் பேணுதல் போன்ற எக்காரணத்தை முன்னிட்டும், பகிரங்க வன்முறையையும் அவதூறுகளையும் நியாயப்படுத்த முடியாது என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.