HSBC Electronic Data Processing Lanka நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் உள்ளூர் செயற்பாடுகளை வேறு நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். HSBC நிறுவனத்தின் தலைவர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோருக்கு விசேட கடிதமொன்றை அனுப்பி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த இந்த கூட்டாண்மையின் ஊடாக பலரின் தொழில்சார் வாழ்க்கை கட்டியெழுப்பப்பட்டதுடன், குடும்பங்கள் பலப்படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு சர்வதேச மட்டத்திலான திறன்கள் வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார். வெறும் முதலீடாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை நாட்டிற்கும் HSBC வர்த்தக நாமத்திற்கும் பெருமை சேர்த்தது என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
முக்கிய விடயங்கள்
- செயற்பாடுகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ரவி கருணாநாயக்க கோரிக்கை
- HSBC தலைவர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விசேட கடிதம்
- இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உறவைப் பாதுகாக்குமாறு வேண்டுகோள்
இலங்கையுடன் இணைந்திருக்குமாறு கோரிக்கை
இந்த திட்டத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஆரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டமையானது, எமது மக்களின் திறமைகள் மீதும், அவற்றை அடையாளங்காண்பதற்கு HSBC நிறுவனம் காட்டிய ஆர்வம் மீதும் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையினாலேயே ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். அந்த நம்பிக்கை இன்றும் மாறாமல் இருப்பதாகவும், முன்னோக்கிச் செல்வதற்கான வழியைக் கண்டறிய திறமைகளையும் வளங்களையும் ஒன்றிணைக்க முடியும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையிலிருந்து வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்து, இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கையுடன் இணைந்திருக்குமாறும், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டாண்மைக்கு புதியதொரு உயிர்ப்பை வழங்குமாறும் தான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.





