நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலுள்ள 'ஐ ஃபிலிம் மியூசியத்தில்' (Eye Filmmuseum) நவம்பர் 01 ஆம் திகதி விருது பெற்ற இலங்கைத் திரைப்படமான 'பம்பரு அவித்' (Bambaru Avith) விசேடமாகத் திரையிடப்பட்டது.

தி ஹேக்கில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான 75 ஆண்டுகால இருதரப்பு இராஜதந்திர உறவுகளைக் குறிக்கும் வகையில், டச்சு அமைச்சுகளின் அதிகாரிகள், இராஜதந்திரிகள், கல்வியலாளர்கள், கலாசாரப் பிரமுகர்கள் மற்றும் உள்ளூர் இலங்கைச் சமூகத்தினர் இதில் கலந்துகொண்டனர்.

சினிமா ஊடாக இணைதல்

நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் ரேகா குணசேகர, இலங்கையின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டியதுடன், உள்நாட்டு இயக்குநர்கள் உலகளாவிய மனித உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வு உள்நாட்டுத் திரைப்படங்களை வெளிநாடுகளில் மேம்படுத்துவதற்கும், கலாசாரப் பிணைப்புகளை பலப்படுத்துவதற்கும் உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

டச்சு வெளிவிவகார அமைச்சின் அன்னேமரி வான் டெர் ஹெய்டன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்றுத் தொடர்புகளை நினைவு கூர்ந்ததுடன், கடல்சார் பாதுகாப்பு, துறைமுக அபிவிருத்தி, கடலடி உட்கட்டமைப்பு, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேசினார்.

'ஐ ஃபிலிம் மியூசியத்தின்' சேகரிப்பு மற்றும் அறிவுப் பகிர்வுக்கான பணிப்பாளர் மாரல் மொஹ்செனின், கலாசாரங்களை இணைப்பதில் சினிமாவின் பங்கை பாராட்டியதுடன், மேலும் பல இலங்கைத் திரைப்படங்களை அங்கு திரையிட விருப்பம் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படம்

மறைந்த தர்மசேன பத்திராஜ இயக்கியதும், மறைந்த பிரேமசிரி கேமதாச இசையமைத்ததுமான 'பம்பரு அவித்' திரைப்படம், சிங்கப்பூரின் ஆசிய திரைப்படக் காப்பகத்தால் (Asian Film Archive) மீளமைக்கப்பட்ட முதல் தெற்காசியத் திரைப்படம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது.

தூதரகத்தின் கூற்றுப்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் கிட்டத்தட்ட 425 ஆண்டுகள் பழமையானவை என்றாலும், உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் 1951 நவம்பர் 23 அன்று ஆரம்பமாகின. திரைப்படத் திரையிடலைத் தொடர்ந்து, வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய இலங்கை இனிப்புகள், சிற்றுண்டிகள் மற்றும் சிலோன் தேநீர் ஆகியவை வழங்கி உபசரிக்கப்பட்டது.

குறிச்சொற்கள்Bambaru AvithfilmNetherlands