மின்சாரக் கட்டணத் திருத்தம் தேவையில்லை என மின் கட்டமைப்பை இயக்கும் தேசிய கட்டமைப்பு இயக்குநரான NSO நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த போதிலும், அதற்காக மக்கள் கருத்தறியும் அமர்வுகளை நடத்தப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. இதன் ஊடாக மக்களின் நிதி ஏன் வீணடிக்கப்படுகின்றது என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
தற்போதுள்ள தரவுகள் மற்றும் முன்னறிவிப்புகளின்படி இவ்வருடத்தில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், தோல்வியடைந்தவர்கள் மற்றும் யூடியூபர்கள் கருத்து வெளியிடுவதற்கான தேவையற்ற மேடை ஒன்று மட்டுமே அமைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
செலவு 4 பில்லியனால் குறைந்துள்ளது
வழமைபோன்று தேசிய கட்டமைப்பு இயக்குநரினால் ஒவ்வொரு காலாண்டுக்கும் உரிய மின்னுற்பத்திச் செலவு மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அக்டோபர் 6 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில், மின்னுற்பத்திச் செலவு 129 பில்லியன் ரூபாவிலிருந்து 125 பில்லியன் ரூபாவாகக் குறைந்துள்ளதாக NSO நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. உற்பத்திச் செலவு குறைந்துள்ளதால் கட்டணத் திருத்தத்துக்கான எந்தவொரு தேவையும் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
NSO தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனத் தெரிவிப்பு
இதற்கிடையில் 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற பங்குதாரர்களின் கலந்துரையாடலிலும் NSO (Pvt) Ltd நிறுவனம் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் எவ்வித கட்டண அதிகரிப்பும் எதிர்பார்க்கப்படவில்லை என அவர்கள் அங்கு தெரிவித்தனர்.
நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு மற்றும் எல் நினோ (El Niño) நிலைமையினால் இயல்பான அளவை விட அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் என வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்திற்கு வந்ததாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.






