கிரிக்கெட் இரசிகர்களும் பழைய மாணவர்களும் புதியதொரு போட்டிக்கு தயாராகி வருகின்றனர். டி.எஸ். சேனநாயக்க கல்லூரி தனது முதலாவது டி.எஸ். பிரீமியர் லீக் (DSPL 2026) உள்ளக கிரிக்கெட் போட்டியை நவம்பர் 21 ஆம் திகதி நடத்துகிறது. இப்போட்டியானது பாடசாலையின் 60 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய விபரங்கள்:
- இப்போட்டித் தொடர் பொரலஸ்கமுவையில் உள்ள கிளப் ஃபியூஷனில் நவம்பர் 21 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் நடைபெறும்.
- ஒரு அணிக்கு 8 வீரர்கள் கொண்ட மென்பந்து உள்ளக கிரிக்கெட் முறையில் 24 அணிகள் இதில் களம் காணவுள்ளன.
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 50,000 ரூபாவும் கிண்ணமும், இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 25,000 ரூபாவும் கிண்ணமும் வழங்கப்படும்.
போட்டி வடிவம் மற்றும் அணிகள்
டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் 2005 ஆம் ஆண்டு பழைய மாணவர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டித் தொடர், பொரலஸ்கமுவை கிளப் ஃபியூஷனில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும். அன்றைய தினம் மொத்தம் 24 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதவுள்ளன.
பல்வேறு பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 பழைய மாணவர் சங்க அணிகளும், டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் 12 பழைய மாணவர் குழுக்களின் அணிகளும் இதில் களம் காணவுள்ளன. போட்டிகள் ஒரு அணிக்கு 8 வீரர்கள் கொண்ட மென்பந்து உள்ளக கிரிக்கெட் விதிகளின் கீழ் இடம்பெறவுள்ளதுடன், இதில் 500 இற்கும் மேற்பட்ட வீரர்கள், பழைய மாணவர்கள், நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணப்பரிசுகளும் ஒன்றுகூடலும்
சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 50,000 ரூபாவையும் வெற்றிக்கிண்ணத்தையும் பெற்றுக்கொள்ளும். அதேவேளை, இரண்டாம் இடத்தைப் பெறும் அணி 25,000 ரூபாவையும் வெற்றிக்கிண்ணத்தையும் தமதாக்கிக் கொள்ளும். சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த களத்தடுப்பாளருக்கான வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளன.
பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களை ஒன்றிணைப்பதும், பாடசாலைகளுக்கு இடையிலான நட்புறவை வளர்ப்பதுமே இந்நாளின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். '24 அணிகள். ஒரு சமர். ஒரு சாம்பியன்' என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வில் இசை, பொழுதுபோக்கு மற்றும் பரஸ்பர சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன.






