ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் நகரில் நடைபெற்ற 2026 ஐ.சி.சி. மகளிர் வளர்ந்துவரும் நாடுகள் கிண்ண இறுதிப் போட்டியில் அயர்லாந்து அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை அணி இன்று (25) சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.

ஹர்ஷிதா சமரவிக்ரம தலைமையிலான இலங்கை வீராங்கனைகள், 44 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே தமது வெற்றியை உறுதிசெய்தனர்.

முக்கிய அம்சங்கள்

  • அயர்லாந்து அணியின் இன்னிங்ஸ் 19.3 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது
  • சத்யா சந்தீபனி 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
  • இலங்கை அணி 44 பந்துகள் மீதமிருக்க, 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலக்கை எட்டியது
  • இமேஷா துலானி ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றார்

அயர்லாந்து இன்னிங்ஸை தகர்த்த பந்துவீச்சு

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சத்யா சந்தீபனி, தனது 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சேத்தனா விமுக்தி, சுகந்திகா குமாரி, நிமாஷா மீபகே மற்றும் கவீஷா தில்ஹாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைப் பகிர்ந்துகொண்டனர். அயர்லாந்து அணி சார்பில் அலானா டால்செல் 27 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

சுலபமான இலக்கை எட்டிப்பிடித்த இலங்கை வீராங்கனைகள்

வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை வீராங்கனைகள், 12.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தனர். அபாரமாக ஆடிய இமேஷா துலானி 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைக் குவித்தார்.

சஞ்சனா கவிந்தி 22 பந்துகளில் 25 ஓட்டங்களையும், நிலக்ஷிகா சில்வா 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர். அயர்லாந்து அணி சார்பில் கியா மெக்கார்ட்னி மற்றும் காரா முர்ரே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையும் படியுங்கள்

  • 28 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்தார் சூர்யவன்ஷி
  • தனிப்பட்ட காரணங்களுக்காக திறமையான வீரர்களை நீக்குவதை நிறுத்துங்கள்: சஜித் கோரிக்கை
  • கிரிக்கெட் வீரர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்ட நடைமுறை அவசியம் என்கிறார் சஜித்