இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகொன்றில் இருந்து, சுமார் 3 பில்லியன் ரூபா சந்தைப் பெறுமதியுடைய 100 கிலோகிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 50 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இன்று (05) முற்பகல் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் குறித்த படகைச் சோதனையிட்டதன் பின்னர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வுபெற்ற) இந்தத் தகவலை வெளியிட்டார்.
படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மேலும் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த சந்தேகத்தின் அடிப்படையில், நேற்று (04) நாட்டிக்கு தெற்கே ஆழ்கடலில் முன்னெடுக்கப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது, உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகொன்று கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது.
மேலதிக சோதனைகள் மற்றும் விசாரணைகளுக்காக குறித்த படகும் அதன் பணியாளர்களும் இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சுமார் 10 உரைகள் குறித்த படகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த படகும் அதன் பணியாளர்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.






