உணவு தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் காலாவதியான எண்ணெய் போத்தல் ஒன்று தொடர்பில், கொழும்பில் உணவகம் ஒன்றை நடத்திச் சென்ற நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தக் காலாவதியான எண்ணெய் போத்தல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றம் விதித்த அபராதம்

இச்சம்பவம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த நவம்பர் 11 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த நிறுவனத்திற்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்ததாக அந்த அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.