வாகன உலகில் புதியதொரு மாபெரும் மைல்கல் எட்டப்பட்டுள்ளது. சீனாவின் பிவைடி நிறுவனத்தின் ஆடம்பர துணை வர்த்தக நாமமான யங்வாங் தனது யூ9 எக்ஸ்ட்ரீம் காரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபிக்குக் கொண்டு சென்று, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) மணிக்கு 503.17 கிலோமீற்றர் வேகத்தை எட்டி புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.

இந்த ஓட்டத்தின் மூலம், மணிக்கு 500 கிலோமீற்றர் வேகத்தைத் தாண்டிய உலகின் முதலாவது உற்பத்தி கார் என்ற பெருமையை இது அதிகாரபூர்வமாகப் பெற்றுள்ளது. சர்வதேச வாகன கூட்டமைப்பு (FIA) இந்தச் சாதனையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், உற்பத்தி கார் ஒன்றின் அதிவேக ஒற்றைத் திசைப் பயணம் மற்றும் அதிவேக மின்சார உற்பத்தி கார் ஆகிய இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை பிவைடி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

முக்கிய விடயங்கள்

  • நவம்பர் 1 அன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெற்ற ஓட்டத்தின் போது யூ9 எக்ஸ்ட்ரீம் மணிக்கு 503.17 கிலோமீற்றர் வேகத்தை எட்டியது.
  • இந்த சாதனையின் மூலம் பிவைடி நிறுவனத்திற்கு இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் கிடைத்துள்ளன, இதனை சர்வதேச வாகன கூட்டமைப்பு (FIA) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
  • ஜேர்மனியின் அனுபவமிக்க ஓட்டுநரான மார்க் பாசெங் மூடப்பட்ட பொது வீதியில் இந்த வாகனத்தை செலுத்தினார்.

பொது நெடுஞ்சாலையில் படைக்கப்பட்ட சாதனை

ஜேர்மனியின் அனுபவமிக்க பந்தய ஓட்டுநரான மார்க் பாசெங் இந்த காரை செலுத்தியிருந்தார். அல் தப்ரா பிராந்தியத்தில் உள்ள ஷேக் கலீஃபா பின் சயீத் சர்வதேச வீதியில் (E11) இந்த அதிவேகப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனைக்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக, ஏழு கிலோமீற்றர் நேரான வீதிப் பகுதி உட்பட குறித்த பொது வீதியின் 10 கிலோமீற்றர் பகுதியை அதிகாரிகள் மூடியிருந்தனர்.

இதற்கான ஆயத்தப் பணிகளுக்கு குழுவினர் இரண்டு நாட்களை எடுத்துக்கொண்டனர். முன்னதாக 2025 செப்டெம்பரில் ஜேர்மனியில் எட்டப்பட்ட மணிக்கு 496.22 கிலோமீற்றர் (308.33 மைல்) வேக சாதனையை இந்த ஓட்டம் முறியடித்துள்ளது.

அக்டோபர் 31 அன்று மணிக்கு 490 கி.மீ உச்ச வேகத்தை எட்டிய ஆரம்ப இரண்டு ஓட்டங்களைத் தொடர்ந்து, வாகனத்தின் நிலைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அதன் காற்று இயக்கவியல், இடைநிறுத்த அமைப்புகள் (சஸ்பென்ஷன்) மற்றும் டயர் அழுத்தங்களை பொறியியலாளர்கள் மேலும் சீரமைத்தனர். நவம்பர் 1 அன்று மேலும் இரண்டு ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், இரண்டாவது ஓட்டத்தில் இறுதியாக மணிக்கு 503.17 கி.மீ வேகம் அடையப்பட்டது, என்று சர்வதேச வாகன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இயக்க ஆற்றலும் செயல்திறனும்

யங்வாங் யூ9 முதன்முதலில் 2024 பெப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 12 சிலிண்டர் எஞ்சினுடன் நான்கு மின்சார மோட்டார்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் 240 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, ஒட்டுமொத்தமாக 960 கிலோவாட் உச்ச ஆற்றலை வழங்குகின்றன.

இந்த வடிவமைப்பு காரணமாக, இந்த காரால் பூச்சியத்திலிருந்து 100 கிலோமீற்றர் வேகத்தை வெறும் 2.36 வினாடிகளில் எட்ட முடியும். அத்துடன் தீவிரமான வேகத்தில் செலுத்தப்படும் போது ஏற்படும் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு அமைப்புகளும் நவீன இடைநிறுத்த அமைப்புகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.