கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டிடமொன்றில் இன்று (17) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பழைய கழிவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த பகுதியில் அதிகாலை 3.45 மணியளவில் இத்தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புப் படையினர்
இரத்தினபுரி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக வைத்தியசாலை வளாகத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணித்தியால தீவிர முயற்சிக்குப் பின்னர் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீக்கிரையான இக்கட்டிடம் முன்னர் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், புதிய வைத்தியசாலைக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் இது கழிவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் இடமாக மாற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரம் துண்டிப்பு, எவருக்கும் காயமில்லை
தீ தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மின் கசிவு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை மின்சார சபை (CEB) அதிகாலை 4.00 மணியளவில் அப்பகுதிக்கான மின் இணைப்பைத் துண்டித்தது.






