இலங்கையின் வனஜீவராசிகள் கள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 84 நவீன சிங்கிள் கெப் வண்டிகள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கி வைக்கப்பட்டன. மனித, யானை மோதலுக்கு உடனடித் தீர்வுகளைக் காண்பதே இந்த நடவடிக்கையின் பிரதான இலக்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல்துறை அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி மற்றும் சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் அன்ரன் ஜயகொடி ஆகியோரின் தலைமையில் இன்று (13) காலை மஹர, கடவத்த டொயோட்டா (TOYOTA) நிறுவனத்தில் இந்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
முழு வாகனக் கட்டமைப்பு 294 ஆக உயர்வு
இலங்கை வரலாற்றில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஒரே தடவையில் கிடைத்த அதிகளவான வாகனத் தொகுதி இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய வாகனங்களின் வருகையுடன் திணைக்களத்தின் மொத்த வாகனக் கையிருப்பு 294 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, 84 சிங்கிள் கெப் வண்டிகள், 16 டபள் கெப் வண்டிகள், 03 குரூ கெப் வண்டிகள், 181 மோட்டார் சைக்கிள்கள், 09 உழவு இயந்திரங்கள் மற்றும் 01 கை உழவு இயந்திரம் ஆகியவை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ளமை தெரியவந்துள்ளது.
அவசர நடவடிக்கைகளுக்கு கூடுதல் பலம்
வனஜீவராசிகள் துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்த வாகனங்களை வழங்குவதில் மனித, யானை மோதல்கள் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் காடழிவுகள் அதிகம் இடம்பெறும் பிராந்தியக் காரியாலயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று கையளிக்கப்பட்ட 84 கெப் வண்டிகள் மூலம் உத்தியோகத்தர்களின் போக்குவரத்துச் சிரமங்கள் நீங்கி, அவசர நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுற்றாடல்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் உதய குமார, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க, மேலதிகப் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள அமரரத்ன மற்றும் டொயோட்டா லங்கா நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






