இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கென்யாவின் பிரதி ஜனாதிபதி பேராசிரியர் கித்துரே கிண்டிகி (Prof. Kithure Kindiki) ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்று வரும் பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கு (CHOGM) இணையாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்

இலங்கை மற்றும் கென்யாவுக்கு இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இங்கு இரு தரப்பினரதும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக விவசாயம், வர்த்தகம், முதலீடுகள் மற்றும் காலநிலை நிதியியல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.

இதற்கு மேலதிகமாக பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளுதல் மற்றும் காலநிலை நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதை விரிவுபடுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.