காட்டு யானைகளைப் பாதுகாத்து, மனித உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் நோக்கில் 'ஹஸ்தி சேனா' தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் கீழ் திறப்பனைப் பகுதியில் இன்று (14) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையினை சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு கண்காணித்தனர்.

இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும், அது கள மட்டத்தில் முன்னெடுக்கப்படும் விதம் குறித்தும் அமைச்சர்களின் நேரடி அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய விடயங்கள்

  • காட்டு யானைகளையும் மனித உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க 'ஹஸ்தி சேனா' நடவடிக்கை முன்னெடுப்பு
  • சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி, பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி ஆகியோர் கள ஆய்வில் பங்கேற்பு
  • இந்த நடவடிக்கைக்கு இராணுவத்தின் 75 பேரைக் கொண்ட குழு பங்களிப்பு

நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பகுதிகள்

கல்குலம, கெட்டமாலகந்த, முரியாகடவல, பெரியமியன்குலம, கிரிந்தேகம, நிராவிய, தலகுகுலு விகாரை, நபடவெவ, வண்ணான்குளம், ஒருக்கன்குளம் மற்றும் குட்டிமடுவ உள்ளிட்ட பல கிராமங்களை உள்ளடக்கிய வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனித-யானை மோதலுக்கு நிலையான தீர்வை வழங்குவதற்கும், காட்டு யானை வளங்களைப் பாதுகாப்பதோடு கிராமப்புற மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இதற்காக பாதுகாப்புப் படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தின் முழுமையான ஆதரவு

சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய, 212 ஆவது காலாட்படை பிரிகேடின் கீழ் உள்ள 7 ஆவது இலங்கை கவசப் படையணியின் பிரதான பங்களிப்புடன் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

21 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கமிந்த சில்வா மற்றும் 212 ஆவது காலாட்படை பிரிகேடின் தளபதி பிரிகேடியர் சுரங்க பஸ்நாயக்க ஆகியோரின் மேற்பார்வையில் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 7 ஆவது இலங்கை கவசப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் பிரபாத் அபேவிக்ரமவின் வழிகாட்டலிலும், படைப்பிரிவுத் தளபதி மேஜர் திமுத்து முல்லேவிதானவின் பங்கேற்புடனும் 07 இராணுவ அதிகாரிகள் மற்றும் 68 ஏனைய நிலை வீரர்கள் உட்பட 75 பேரைக் கொண்ட இராணுவக் குழுவினர் இதில் இணைந்திருந்தனர்.