2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (18) அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.
ருஹுணு பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த தொழிற்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அக்குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.
- 2027 வரவு செலவுத் திட்டத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிராக இன்று (18) அடையாள வேலைநிறுத்தம் இடம்பெறுகின்றது.
- பட்டமளிப்பு விழா காரணமாக ருஹுணு பல்கலைக்கழகம் மாத்திரம் இந்த பணிப்பகிஷ்கரிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
- பல்கலைக்கழகங்களுக்கு முன்னால் மற்றும் கொழும்பை மையப்படுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் விதம்
ருஹுணு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுவதால், அப்பல்கலைக்கழகம் வேலைநிறுத்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து பல்கலைக்கழகங்களும் தத்தமது நிறுவனங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன், கொழும்பு நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் கொழும்பில் ஓரிடத்தில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தம்மிக்க எஸ். பிரியந்த குறிப்பிட்டார்.
"தற்போதைய அரசாங்கம், தங்களது கன்னி வரவு செலவுத் திட்டத்திலும் பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு பாரிய அநீதியை இழைத்துள்ளது. அது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களில், இந்த வரவு செலவுத் திட்டத்தில் அவை சரிசெய்யப்படும் என பிரதமரும், நிதி பிரதி அமைச்சரும் தெளிவான இணக்கப்பாட்டுக்கு வந்தனர். ஆனால் 2027 வரவு செலவுத் திட்டத்திலும் அவை சரிசெய்யப்படவில்லை, மேலும் பிரச்சினைகளையே உருவாக்கினர்."






