இலங்கையில் உள்நாட்டு எரிவாயுவை விநியோகிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று சிலிண்டர் ஒன்றின் விலையை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினர் பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய சுற்றாடல், விவசாயம் மற்றும் வளங்களின் நிலைபேறுதன்மை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையிலேயே வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

முக்கிய விடயங்கள்

  • தனியார் நிறுவனம் ஒன்று உள்நாட்டு எரிவாயு விலையை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தமை கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.
  • உள்நாட்டு எரிவாயுக்கான விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் தமது அதிகார சபைக்கு இல்லை என தலைவர் தெரிவித்துள்ளார்.
  • பேச்சுவார்த்தைகள் ஊடாக விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.

விலைக் கட்டுப்பாடு குறித்து தலைவர் கூறிய விடயம்

இங்கு கருத்துத் தெரிவித்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், உள்நாட்டு எரிவாயுவுக்கான விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் தமது நிறுவனத்திற்கு இல்லை எனக் குறிப்பிட்டார். எனினும் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியத்தைக் கருத்திற் கொண்டு தாம் தலையிட்டதாகவும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துடன் கலந்துரையாடி விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

சந்தையில் குறைந்த பங்கைக் கொண்டிருப்பதனால் அதிக விலைக்கு எரிவாயுவைக் கொள்வனவு செய்ய நேரிட்டதாகவும், அதனால் விலையை உயர்த்தியதாகவும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியதாகத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், எதிர்காலத்தில் எரிவாயு விநியோகத்திற்குத் தடை ஏற்படாத வகையிலும் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையிலும் பார்த்துக்கொள்ளுமாறு குழு வலியுறுத்தியுள்ளது.