ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணை ஒன்றுக்காக, அவரது தனிப்பட்ட பணியாட்தொகுதியைச் சேர்ந்த இரு சாரதிகளை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாளையும் (18) நாளை மறுதினமும் (19) இவ்வாறு முன்னிலையாகவுள்ளனர்.
ஆணைக்குழுவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எச்.எம்.ஜீ. அபேசிங்கவினால் நாடாளுமன்ற பணிப்பாளர் (நிர்வாகம்) ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய விடயங்கள்
- நாளையும் (18) நாளை மறுதினமும் (19) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும்.
- NC 4923 இலக்க வாகனத்தின் பயண விபரங்கள் மற்றும் விபத்து தொடர்பான ஆவணங்களை எடுத்து வருமாறு உத்தரவு.
- முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சமிந்த குலரத்ன முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள்.
- சபாநாயகருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
நாடாளுமன்றத்தின் NC 4923 இலக்க வாகனத்தை பொறுப்பேற்றமை மற்றும் அதனை கடமைகளுக்குப் பயன்படுத்தியமை தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அத்துடன் 2025 செப்டெம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதிக்கான பயண விபரங்கள் மற்றும் இவ்வருடம் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி குறித்த வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பான ஆவணங்களையும் எடுத்து வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதித் தலைவருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய, 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகனக் குற்றச்சாட்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும்
சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக இரண்டு வாகனங்கள் மாத்திரமே உரித்தாகின்ற போதிலும், அனுமதியின்றி ஊடகப் பிரிவு ஒன்றை உருவாக்கி அதற்காக நாடாளுமன்றத்தின் வாகனம் ஒன்றை சட்டவிரோதமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் சபாநாயகரின் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அதனை திருத்துவதற்காக காப்புறுதித் தொகைக்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தின் நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நாடாளுமன்ற போக்குவரத்து பிரிவின் உயர் அதிகாரிகளிடமும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்களினால் 50 குற்றச்சாட்டுகளைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக மேலதிக வாகனம் ஒன்றைப் பயன்படுத்தியமையும் அதில் ஒரு குற்றச்சாட்டாக உள்ளடக்கப்பட்டுள்ளது.






