முன்மொழியப்பட்டுள்ள தொழில் சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் தொடர் நிகழ்ச்சித் திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (22) நடைபெற்றது.
இந்நிகழ்வில் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தொழில் வழங்குநர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அங்கு உத்தேச புதிய தொழில் சட்டங்கள் தொடர்பான தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு முன்வைக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
முக்கிய விடயங்கள்
- 3 தடவைகள் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் வேலைநிறுத்தம் செய்வது நியாயமற்றது என பிரதி அமைச்சர் தெரிவிப்பு.
- புதிய தொழில் சட்ட மறுசீரமைப்பு பற்றிய முதலாவது விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (22) இடம்பெற்றது.
- புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு 17 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில் சட்டங்களுக்காக 17 உறுப்பினர்களைக் கொண்ட குழு
தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் தொழில் சந்தை தேவைகளுக்கு ஏற்ப நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்தி, புதிய தொழில் சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன், தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல், தொழில் வழங்குநர்களின் தேவைகளைக் கருத்திற்கொள்ளல், தொழில்துறை உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் சர்வதேச தொழில் தரநிலைகளுக்குப் பொருத்தமான சூழலை உருவாக்குதல் என்பன இதன் முக்கிய நோக்கங்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த மாகாண மட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.






