பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் அதனால் நியமிக்கப்பட்ட உப குழுவின் விசேட கூட்டமொன்று கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்படுபவர்களின் முந்தைய குற்றங்கள் குறித்து இந்நாட்டு நிறுவனங்களுக்குத் தெரியாத காரணத்தால், அவர்கள் சாதாரண பொதுமக்களைப் போன்று சமூகத்தில் நடமாடுவதாக அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக அத்தகைய நபர்களினால் மீண்டும் அவ்வாறான குற்றங்கள் இழைக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச தரவு அமைப்பும் தீவிர விசாரணைகளும்
அத்தகைய குற்றவாளிகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது குறித்தும், அத்தகவல்களை பொலிஸ் குற்றப் பதிவு முறைமையில் (CRD) உட்சேர்ப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, சிறுவர்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்ளும்போது அவர்களது பின்னணி குறித்த கட்டாய ஆய்வை மேற்கொள்வதற்கும், மீண்டும் இவ்வாறான குற்றங்கள் நிகழ்வதைத் தடுப்பதற்கு சட்டபூர்வமான கண்காணிப்பு பொறிமுறையொன்றை அமைப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டது.
நன்னடத்தை சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளும் சட்டத் திருத்தங்களும்
நன்னடத்தை பராமரிப்பில் உள்ள சந்தேகத்திற்குரிய மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலையை உறுதிப்படுத்துவதற்கும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது. மாகாண சபைகளின் கீழ் உள்ள நன்னடத்தை நிறுவனங்களை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டம் மற்றும் 1999 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க பராமரிப்புச் சட்டம் ஆகியவற்றை விரைவாகத் திருத்துவதற்கும், அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால் வழக்குத் தீர்ப்புகள் தாமதமாவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.






