வடமேற்கு செனகலில் இருந்து ஒரு துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் ஏற்றிச் சென்ற சிறிய பிரோக் (pirogue) ரக தட்டையான அடிப்பாகத்தைக் கொண்ட படகு கடலில் மூழ்கியதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக செனகல் செய்தி நிறுவனம் (APS) தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாக செனகல் உள்துறை அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேவேளை, மனித உரிமைகள் மற்றும் நட்புறவிற்கான நடவடிக்கை (ADHA) அமைப்பும் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.
முக்கிய விடயங்கள்
- சிறிய படகு கவிழ்ந்ததில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் உட்பட குறைந்தது 34 பேர் உயிரிழந்தனர்.
- இதுவரை ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக செனகல் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
- இந்த விபத்து சனிக்கிழமை கெபேமர் (Kebemer) பகுதியில் உள்ள லூம்பூல் (Loumpoul) மணற்குன்றுகளுக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது.
மணற்குன்றுகளுக்கு அப்பால் நிகழ்ந்த சோகம்
டக்கார் (Dakar) மற்றும் செயிண்ட் லூயிஸ் (Saint-Louis) ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள கெபேமர் பிரிவிலுள்ள லூம்பூல் மணற்குன்றுகளுக்கு அப்பால் சனிக்கிழமையன்று இந்தப் படகு கவிழ்ந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அதே பிரிவிலுள்ள லியோனா (Leona) மற்றும் தியேப்பே (Thieppe) மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என 'லெ சோலைல்' (Le Soleil) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கேனரி தீவுகளுக்கான ஆபத்தான பயணம்
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளை சென்றடைய முயன்று அண்மைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 635 பேர் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழுவான 'வோக்கிங் பார்டர்ஸ்' (Walking Borders) தெரிவித்துள்ளது.
கேனரி தீவுகளில் ஒன்றான எல் ஹியரோவில் (El Hierro), திடீரென புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரித்ததன் காரணமாக சனிக்கிழமையன்று ஸ்பானிய அதிகாரிகள் அவசர நிலையை அறிவித்தனர். நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து சுமார் 30 படகுகளில் 3,300 இற்கும் மேற்பட்டோர் அங்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






