உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Nvidia இன் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மற்றும் சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணொருவருக்கும் இடையில் நிலவிய தொடர்பு தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நிறுவனத்தினுள் சுயாதீன விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்பட்ட தவறை ஏற்றுக்கொண்ட ஜென்சன் ஹுவாங், தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். தான் செய்த செயலுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்கள் மத்தியில் தன்னிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நிலையை அடைய முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய விடயங்கள்
- சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் அலிஸ் ஹுவாங் என்பவருடன் ஜென்சன் ஹுவாங் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
- இது தொடர்பாக சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுக்க Nvidia பணிப்பாளர் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
- நிறுவனத்தின் இரகசியங்களோ அல்லது தேசிய பாதுகாப்போ அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை என நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
யார் இந்த சீனப் பெண்?
ஜென்சன் ஹுவாங்குடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த அலிஸ் ஹுவாங் (Alice Huang) என்ற சீன வர்த்தகப் பெண், பெய்ஜிங் அரசாங்கத்திற்காக உளவு பார்த்தவர் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், நிறுவனத்தின் இரகசியங்களோ அல்லது தேசிய பாதுகாப்போ ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை எனவும், தலைமை நிர்வாக அதிகாரி நிறுவனத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் Nvidia தெரிவித்துள்ளது.
“அவர் ஒரு திறமையானவர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் என்ன நடக்கிறது என்பதை நாம் ஒருபோதும் கூற முடியாது” டொனால்ட் ட்ரம்ப்
ட்ரம்பின் கருத்து
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜென்சன் ஹுவாங் வழிநடத்தி வரும் Nvidia நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான பிரதான வன்பொருள் வழங்குநராக உள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக பணிப்பாளர் சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணைக்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜென்சன் ஹுவாங் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தான் Nvidia தலைவருடன் பேசவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.





