இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் லெவன் எஸ். ஜகாரியன் (Levan S. Dzhagaryan), நேற்று (04) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது, ரஷ்ய கூட்டமைப்பின் பெடரல் பேரவையின் சம்மேளன சபை தலைவர் வலன்ரினா மற்வியென்கோ (Valentina Matviyenko) அவர்களால் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிதழை தூதுவர் கையளித்தார்.

2027 ஆம் ஆண்டு விஜயமும் உறவுகளை வலுப்படுத்துதலும்

இரு தரப்பினருக்கும் வசதியான ஒரு திகதியில், 2027 ஆம் ஆண்டில் ரஷ்ய கூட்டமைப்பிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு சபாநாயகருக்கு இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பெடரல் பேரவையின் சம்மேளன சபைக்கும் இலங்கை பாராளுமன்றத்திற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த அழைப்பு முக்கியமானதாக அமையும் என கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், பல பரந்த துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் இது வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.