புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக பாடசாலை நேர அட்டவணைகளை தயாரிப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்றை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாண தலைமைச் செயலாளர்கள், கல்விச் செயலாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய விடயங்கள்
- அடுத்த ஆண்டு முதல் 1 மற்றும் 2 ஆம் தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
- 3 மற்றும் 4 ஆம் தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும்.
- 5 ஆம் தரம் முதல் க.பொ.த உயர்தரம் வரை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலை நடைபெறும்.
- க.பொ.த சாதாரண தரத்திற்கு புதிய மறுசீரமைப்புகள் 2030 ஆம் ஆண்டிலும், உயர்தரத்திற்கு 2033 இலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
பாடசாலை நடைபெறும் புதிய நேரங்கள்
புதிய சுற்றறிக்கைக்கு அமைய அடுத்த ஆண்டு முதல் 1 மற்றும் 2 ஆம் தரங்களுக்கான பாடசாலை நடைபெறும் நேரம் காலை 7.30 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரை திருத்தியமைக்கப்படவுள்ளது.
அதேபோல், 3 மற்றும் 4 ஆம் தர மாணவர்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை எனவும், 5 ஆம் தரம் முதல் உயர்தரம் வரை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலை நடைபெறும் எனவும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்ட மறுசீரமைப்புப் பயணம்
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1 ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக அடுத்த ஆண்டில் 2 ஆம் தரம் மற்றும் 6 ஆம் தரங்களுக்காக புதிய மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அதன் பின்னர் மாணவர்கள் இந்த புதிய முறையினூடாகவே உயர் வகுப்புகளுக்கு முன்னேறிச் செல்வர். அதன்படி தற்போது 1 ஆம் தரத்தில் கல்வி பயிலும் பிள்ளைகள் 5 ஆம் தரத்தை அடையும் ஆண்டில் அத்தரத்திற்கும் இந்த புதிய பாடத்திட்டம் இணைத்துக் கொள்ளப்படும். சாதாரண தரத்திற்கு இது 2030 ஆம் ஆண்டிலும், உயர்தரத்திற்கு 2033 ஆம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
- டின் இலக்கம் கட்டாயமாக்கப்படுவது அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை ஒத்திவைப்பு
- உள்நாட்டு வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பு
- செனாரோ புதிய காட்சியறை இரத்தினபுரி புதிய நகரில் திறப்பு






