இலங்கையில் மருத்துவர்கள் அல்லாத சுமார் 40,000 பேர் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ருவன் பெர்டினாண்டோ இதனைத் தெரிவித்தார்.

இந்த நிலைமை நாட்டின் பொதுச் சுகாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளுக்கு (Antibiotics) எதிராக கிருமிகளின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாகவும், அதற்கு இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளின் பயன்பாடு உயர் மட்டத்தில் இருப்பதே பிரதான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய விடயங்கள்

  • மருத்துவர்கள் அல்லாத சுமார் 40,000 பேர் இலங்கையில் மருந்துகளை விநியோகிக்கின்றனர்.
  • இந்த நிலைமையினால் கிருமிகளுக்கு எதிரான மருந்து எதிர்ப்புத் தன்மை அதிகரித்து வருகின்றது.
  • மருந்தகங்களில் பணியாற்றிவிட்டு எந்தவொரு தகுதியும் இன்றி மருந்து வழங்குபவர்களும் இதில் அடங்குவர்.

யார் இந்த மருத்துவர்கள் அல்லாத 40,000 பேர்?

எந்தவொரு மருத்துவக் கல்லூரிக்கும் செல்லாமல், மருந்தகங்களில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து மருந்துகளை அடையாளம் கண்டு மக்களுக்கு மருந்து வழங்கும் நபர்கள் இவர்களில் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது.

சட்டப்படி மேற்குலக மருத்துவ மருந்துகளை இலங்கை மருத்துவ சபையில் (Sri Lanka Medical Council) பதிவுசெய்த மருத்துவர்களால் மட்டுமே வழங்க முடியும் என்றும், அத்துடன் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை வழங்குவது தொடர்பாக சமூகத்தில் தீவிர கலந்துரையாடல் ஒன்று எழ வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் ருவன் பெர்டினாண்டோ மேலும் கூறினார்.

“கிருமிகளுக்கு மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகி வருகின்றது. குறிப்பாக நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் தொடர்பில். அதற்கு முக்கிய காரணம் இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதேயாகும். முதலாவது விடயம் நோயாளிகள் வீடுகளிலேயே நோய்களுக்காக நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை உட்கொள்கின்றனர். இரண்டாவது விடயம் அவர்கள் மருத்துவர்களிடம் சென்று எமக்கு நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளைத் தாருங்கள் எனக் கேட்கின்றனர்.” - விசேட வைத்திய நிபுணர் ருவன் பெர்டினாண்டோ