வாரியபொல, அவுலேகம - கரந்தவெட்டிய பகுதியில் இன்று (10) அதிகாலை மின்சாரம் தாக்கியதில் துரதிர்ஷ்டவசமாக தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னகோன்கம, கரந்தவெட்டிய பகுதியைச் சேர்ந்த எஸ்.எம். தேவசிறி (61) மற்றும் ஈ.எம். கருணாவதி (60) ஆகிய நான்கு பிள்ளைகளின் பெற்றோரான தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முக்கிய விடயங்கள்

  • வாரியபொல அவுலேகம கரந்தவெட்டிய பகுதியில் இன்று அதிகாலை விபத்து நிகழ்ந்தது
  • உயிரிழந்தவர்கள் 61 வயதான எஸ்.எம். தேவசிறி மற்றும் 60 வயதான ஈ.எம். கருணாவதி தம்பதியினர் ஆவர்
  • வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த விளக்கை அணைக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கியுள்ளது
  • மின்கம்பத்தில் சுற்றப்பட்டிருந்த பூமித் தொடுப்பு கம்பி குறித்து மின்சார சபை மீது குற்றச்சாட்டு

விபத்து நிகழ்ந்த விதம் மற்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்

இன்று காலை தமது வீட்டின் முன்பாக அமைந்துள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த விளக்கை அணைக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிப்பதுடன், அவர்கள் இது தொடர்பில் மின்சார சபையின் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த மின்கம்பத்தில் சுற்றப்பட்டிருந்த பூமித் தொடுப்பு (எர்த்) வயர் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர். முன்னதாக அவ்வீட்டின் அருகே செல்லும் வீதியிலுள்ள பிரதான மின்சார கட்டமைப்பின் பூமித் தொடுப்பு கம்பி அறுந்து விழுந்த பின்னர், மின்சார சபையிலிருந்து வந்த பணியாளர்கள் அதனை இம்மின்கம்பத்தில் சுற்றி வைத்துவிட்டுச் சென்றதாகவும், பல நாட்கள் அவ்வாறே இருந்த போதிலும் இதுவரை எவ்வித ஆபத்தும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.