வட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றிற்கு இறுதியாக பதிலளித்துள்ளது. அன்ட்ரொயிட் மற்றும் ஐஓஎஸ் சாதனங்களுக்கான செய்தி திட்டமிடல் வசதியை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளதாக WABetaInfo தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வசதியானது தனிநபர் உரையாடல்கள் மற்றும் குழு உரையாடல்கள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் என்பதோடு எழுத்துக்கள், இணைப்புகள், காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பவும் உதவும்.
முக்கிய விடயங்கள்
- பயனர்கள் எழுத்துக்கள், இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை 10 நிமிடங்களிலிருந்து 14 நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட முடியும்.
- செய்தியை அனுப்புபவரின் தொலைபேசி இயங்காத நிலையில் அல்லது இணைய வசதி இல்லாத போதும் கூட செய்திகள் சென்றடையும்.
- இவ்வாறு திட்டமிடப்படும் செய்திகள் முழுமையான குறியாக்கப் பாதுகாப்பை கொண்டிருக்கும் என்பதுடன் பெறுநர்களுக்கு சாதாரண செய்திகள் போன்றே தோன்றும்.
- இந்த புதிய வசதி எதிர்வரும் வாரங்களில் உலகளவில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
புதிய வசதி எவ்வாறு தொழிற்படுகிறது?
திட்டமிடப்பட்ட செய்தி ஒன்றை அமைக்க, பயனர்கள் உரையாடலில் தகவலை தட்டச்சு செய்து அல்லது ஊடகத்தை தெரிவுசெய்து, அனுப்பும் பொத்தானை அழுத்திப் பிடிக்க வேண்டும். பின்னர் செய்தி அனுப்பப்பட வேண்டிய திகதி மற்றும் நேரத்தை தெரிவுசெய்வதற்கான திரை தோன்றும்.
செய்தி அனுப்பப்படுவதை 10 நிமிடங்களிலிருந்து அதிகபட்சமாக 14 நாட்களுக்கு முன்னதாக திட்டமிட முடியும். பெறுநர்களுக்கு இது எந்தவித மாற்றமுமின்றி இயல்பான செய்தியாகவே தோன்றும்.
இந்தச் செய்திகள் வட்ஸ்அப் வழங்கித் தளங்களில் பாதுகாப்பாக சேமிக்கப்படுவதால், உங்களது தொலைபேசியில் மின்கலம் தீர்ந்துபோனாலோ அல்லது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ கூட குறித்த நேரத்தில் சென்றடையும். இவை முழுமையான குறியாக்கப் பாதுகாப்புடன் பாதுகாக்கப்படுவதை வட்ஸ்அப் உறுதிப்படுத்தியுள்ளது.
செய்திகளை நிர்வகித்தல் மற்றும் குழு விதிகள்
அனுப்பப்படாமல் காத்திருக்கும் செய்திகளை, அவை சென்றடைவதற்கு முன்னர் உரையாடல் தகவல் பகுதி ஊடாக பயனர்கள் பார்வையிடவோ அல்லது இரத்து செய்யவோ முடியும். நீங்கள் செய்தியை இரத்து செய்தால், அது குறித்து பெறுநருக்கு எவ்வித அறிவித்தலும் செல்லாது.
குழு உரையாடல்களில், செய்தி திட்டமிடப்பட்ட தருணத்தில் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு மட்டுமே அச்செய்தி சென்றடையும். பின்னர் இணையும் நபர்களுக்கு அச்செய்தி கிடைக்காது.
அடுத்து என்ன?
இந்த வசதி எதிர்வரும் வாரங்களில் உலகளவில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே இந்த வசதியைப் பெற்றுக்கொள்ள பயனர்கள் தங்களது வட்ஸ்அப் செயலியை புதுப்பித்த நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் வாசிக்கவும்
- நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி ஒன்றரை வயது சிறுமி உயிரிழப்பு
- மீ ஓயா வெலிஎல அணைக்கட்டுக்கு அருகில் நீராடச் சென்ற 18 வயது இளைஞன் மாயம்
- மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பதவி விலகல்






