கெய்ரோ நகரின் வராக் (Warraq) பகுதியில் அமைந்துள்ள அதிவேக சுற்றுவட்ட நெடுஞ்சாலையில் நேற்று (25) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்குச் சொந்தமான எரிபொருள் தாங்கி பவுசர் பயணித்துக் கொண்டிருந்த போது, உயர் அழுத்த மின் கம்பி ஒன்று வீதியில் அறுந்து விழுந்துள்ளது. இதன்போது பவுசரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத சாரதி, வீதியின் நடுவே உள்ள தடுப்பைத் தாண்டி மறுபக்கமாக கவிழ்ந்துள்ளார்.
முக்கிய விடயங்கள்
- மின் கம்பி அறுந்து விழுந்ததால் கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் பவுசர் விபத்துக்குள்ளானது.
- தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர்.
- காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல 39 அவசர சிகிச்சை ஊர்திகள் ஈடுபடுத்தப்பட்டன.
- உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பரவிய தீயும் நிவாரணப் பணிகளும்
பவுசரிலிருந்து எரிபொருள் வீதியில் பரவியதை அடுத்து பெரும் தீ மூண்டதுடன், அருகில் பயணித்துக் கொண்டிருந்த மற்றும் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கும் தீ பரவியது. தீக்காயங்களுக்கு உள்ளானவர்களும், புகையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
நிவாரணப் பணிகளுக்காக 39 அவசர சிகிச்சை ஊர்திகள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், எகிப்து சுகாதார அமைச்சரும் நேரடியாக மருத்துவமனைகளுக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதத்தை பார்வையிட்டார்.
விசாரணைகளும் வீதி திறப்பும்
இச்சம்பவம் தொடர்பில் பிராந்திய சட்ட அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், உயிரிழந்த நபர்களை அடையாளம் காணும் நோக்கில் டி.என்.ஏ. (DNA) பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து அதிவேக நெடுஞ்சாலையில் எரிந்து சேதமடைந்த வாகனங்கள் அகற்றப்பட்டு, தற்போது வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
- ரஷ்ய கூட்டமைப்பின் சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சான் விசேட குழுவுடன் இலங்கை வருகை
- மாஸ்கோவில் இருந்து மத்தள வந்த Azur Air விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: தீவிர சோதனை
- மீன்பிடி பிரச்சினை: இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை புதுடில்லியில்






