பத்து ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பீற்றரைட் கிரிக்கெட் லீக் (PCL) தொடர் மிகச் சிறப்பாக மீண்டும் ஆரம்பமானது. புனித பீற்றர் கல்லூரி மைதானத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இத்தொடரில் எட்டு பிராஞ்சைஸ் அணிகள் போட்டியிட்டதுடன், போட்டிகள் நவம்பர் 8 ஆம் திகதி நிறைவடைந்தன.
இத்தொடரில் Resistance Panthers, Foundation Guardians, UK Peterites, Thambappanni Lions, Colombo Sports Hub, Top Knock Titans, Colombo Tuskers மற்றும் Bamba Patriots ஆகிய அணிகள் பங்கேற்றன.
முக்கிய அம்சங்கள்
- பத்து ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு எட்டு பிராஞ்சைஸ் அணிகளின் பங்களிப்புடன் மீண்டும் ஆரம்பமான பீற்றரைட் கிரிக்கெட் லீக்.
- கொழும்பு டஸ்கர்ஸ் அணி ஆறு ஓவர்களில் 75 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டி நடுவர்கள் கொழும்பு ஸ்போர்ட்ஸ் ஹப் அணியுடன் கிண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்தனர்.
- பம்பா பேட்ரியட்ஸ் அணி, பவுண்டேஷன் கார்டியன்ஸ் அணியை ஒன்பது ஓட்டங்களால் வீழ்த்தி பிளேட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது.
- தொடரின் நாயகன் விருதை மனேல்கர் டி சில்வா தட்டிச் சென்றார்.
கிண்ண இறுதிப் போட்டிக்கான பாதை
கிண்ண சாம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியில், ரெசிஸ்டன்ஸ் பாந்தர்ஸ் அணியை வெளியேற்றி கொழும்பு ஸ்போர்ட்ஸ் ஹப் அணி ஆறு ஓவர்களில் 90 ஓட்டங்களை விளாசியது. மனேல்கர் டி சில்வா மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோரின் அதிரடி ஆட்டம் இந்த பாரிய ஓட்ட எண்ணிக்கைக்கு அடித்தளமாக அமைந்தது.
மற்றைய அரையிறுதி ஆட்டத்தில், ஷாலித் பெர்னாண்டோ பெற்ற உறுதியான 32 ஓட்டங்களின் உதவியுடன் கொழும்பு டஸ்கர்ஸ் அணி, டொப் நாக் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மழையால் கைவிடப்பட்ட இறுதிப் போட்டியும் பிளேட் வெற்றியாளர்களும்
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு டஸ்கர்ஸ் அணி, கொழும்பு ஸ்போர்ட்ஸ் ஹப் அணிக்கு எதிராக தனது ஆறு ஓவர்களில் 75 ஓட்டங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மோசமான வானிலை நிலவியதால், இறுதிப் போட்டியில் விளையாடிய இரு அணிகளையும் இணைச் சாம்பியன்களாக நடுவர்கள் அறிவித்தனர்.
பிளேட் சாம்பியன்ஷிப் போட்டியில், 30 ஓட்டங்களைப் பெற்று அசத்திய லஹிரு தாவத்தகேயின் ஆட்டத்தின் மூலம் பம்பா பேட்ரியட்ஸ் அணி, பவுண்டேஷன் கார்டியன்ஸ் அணியை ஒன்பது ஓட்டங்களால் தோற்கடித்து பட்டத்தை வென்றது.
சிறந்த வீரர்கள்
பல வீரர்கள் சிறப்பு விருதுகளைத் தட்டிச் சென்றனர். கொழும்பு ஸ்போர்ட்ஸ் ஹப் அணியின் மனேல்கர் டி சில்வா தொடரின் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, கொழும்பு டஸ்கர்ஸ் அணியின் ஷாலித் பெர்னாண்டோ சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதைப் பெற்றார்.
டொப் நாக் டைட்டன்ஸ் அணியின் தினேஷ் பெர்னாண்டோ சிறந்த பந்துவீச்சாளராகவும், கொழும்பு ஸ்போர்ட்ஸ் ஹப் அணியின் துஷான் ஹேமந்த சிறந்த களத்தடுப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.






