புத்தசாசன அமைச்சில் இன்று (16) முற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பதில் அட்டமஸ்தானாதிபதி வண. ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

அனுராதபுர புனித பூமிக்குள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் போது தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆலோசனைக் குழுக் கூட்டம் முன்னதாக அமைச்சில் நடைபெற்றது. அதில் அவரும், ஜனாதிபதியின் பிரதான அதிகாரி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோரும் இணைத் தலைமை வகித்தனர்.

முக்கிய விடயங்கள்

  • புனித நகரில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நோக்கம் அல்லது திட்டம் எதுவும் இல்லை என விளக்கம்
  • சர்ச்சைக்குரிய பாதுகாப்பு வேலி அமைக்கும் யோசனை தற்போது முற்றாக கைவிடப்பட்டுள்ளது
  • அபிவிருத்தி திட்டத்தின் சில விடயங்கள் குறித்து மக்களுக்கு ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்த முடியாமல் போனமைக்கு கவலை

வேலி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்ட விதம்

முன்மொழியப்பட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பில் மக்களுக்கு உரிய முறையில் தெளிவுபடுத்த முடியாமல் போனமை குறித்து தாம் கவலையடைவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக புனித பூமியைச் சுற்றி வேலி அமைக்கும் தீர்மானம் தொடர்பில் தவறான புரிதல் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கால்நடைகள் உட்செல்வதைத் தடுத்தல், தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் மீது வாகனங்களை நிறுத்துவதைத் தடுத்தல் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை கட்டுப்படுத்துவதற்காகவே அந்த வேலி யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், தற்போது அந்த வேலி அமைக்கும் திட்டம் முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

“மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு ஒரு விடயத்தை சமூகமயப்படுத்த முடியாமல் போனமை குறித்து உண்மையில் கவலையடைகிறேன். இதில் இருந்த சில விடயங்கள் தொடர்பில் ஆரம்பத்திலேயே மக்களுக்கு எங்களால் தெளிவுபடுத்த முடியாமல் போனது. உதாரணமாக இந்த வேலி தொடர்பாக சர்ச்சை எழுந்தது. சுமார் ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னரும் இங்கு ஒரு வேலி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வேலியில் எஞ்சிய பகுதியை பாதுகாத்து மீண்டும் நிர்மாணிப்பதற்கான கோரிக்கை மறைந்த தலைமை தேரரினால் முன்வைக்கப்பட்டிருந்தது.”

பதில் அட்டமஸ்தானாதிபதி, ருவன்வெலி மகாசாய விகாராதிபதி வண. ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க தேரர்

மக்களை வெளியேற்றும் திட்டம் இல்லை

புனித நகரில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என வலியுறுத்திய அவர், 28 சதுர கிலோமீட்டராக இருந்த நிலப்பரப்பை 38 சதுர கிலோமீட்டராக திட்டமிட்டமையானது, வருகை தரும் இலட்சக்கணக்கான மக்களையும் வாகன நெரிசலையும் உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்காகவே என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை அமைக்க டோக்கியோ சிமென்ட் நிறுவனம் 100 மில்லியன் ரூபா உதவி
  • ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க மற்றும் பெண்களுக்கான கைப்பந்து அணித் தலைவிக்கு விமானப்படை தளபதியின் பாராட்டு
  • இறக்குமதியாளர் தகவல்கள் இல்லாத தொலைபேசியை விற்பனை செய்த லிபர்ட்டி பிளாசா கடைக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்