உலக வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் "ஆரம்ப சுகாதார கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு" கிடைக்கப்பெற்ற புதிய டொயோட்டா (Toyota) ரகத்தைச் சேர்ந்த 10 டபிள் கெப் வாகனங்கள், 10 பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) அலுவலகங்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.
வாகனங்கள் வழங்கப்பட்ட பிரதேசங்களும் அவற்றின் பயன்பாட்டு நோக்கங்களும்
கிராமிய மற்றும் பிராந்திய மட்டத்தில் தொற்றா நோய்களைக் (NCD) கட்டுப்படுத்துவதற்கும், உள நலம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார சேவைகளை பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனாக கொண்டு சேர்ப்பதற்கும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, புத்தளம், மொணராகலை, பொலன்னறுவை, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகங்களுக்கும், களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்திற்கும் இந்த புதிய கெப் வாகனங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
முக்கிய பிரமுகர்களின் பங்குபற்றல்
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஆரம்ப சுகாதார கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் கலாநிதி லலித் லியனகே மற்றும் சுகாதார அமைச்சு, டொயோட்டா லங்கா (Toyota Lanka) நிறுவனத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.






